/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
மடப்புரத்தில் வசிக்கிறாள் மகிமை பல புரிகிறாள்
/
மடப்புரத்தில் வசிக்கிறாள் மகிமை பல புரிகிறாள்
ADDED : மே 27, 2011 09:54 AM

குழப்பமான மனதுடன் இருப்பவர்களும், எதிரிகளால் அவதிப்படுபவர்களும் மடப்புரம் காளியை வணங்கி வரலாம்.
தல வரலாறு: கருவேலமரங்கள் சூழ்ந்த பெருங்காடாக இருந்த திருப்புவனம் பகுதிக்கு 2,300 ஆண்டுகளுக்கு முன் சிவன், திருமால், பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் வேட்டையாடச் சென்றனர். பார்வதிதேவியும் உடன் சென்றாள். ஓரிடத்தில் பார்வதிதேவியை நிறுத்திவிட்டு,''காடு பரந்துள்ளதால், உன்னால் வர இயலாது. எனவே நீ இங்கேயே (திருப்புவனம்) தங்கியிரு,'' என்று கூறினர்.
''காட்டில் எப்படி தனிமையில் இருப்பது,'' என்று தேவி கேட்க, 'அய்யனார்' என்ற மகனை உருவாக்கி, பார்வதிக்கு துணையாக சிவன் வைத்துவிட்டு சென்றார். அந்த மகனே 'அடைக்கலம் காத்த அய்யனராக' அருள்செய்கிறார். ''நான் இங்கே இருப்பதால், இந்த தலத்துக்கு சிறப்பு நிலை கொடுக்க வேண்டும்,'' என்று சிவபெருமானிடம் பார்வதி கேட்டாள். ''இங்குள்ள வைகை ஆற்றில் குளிப்பவர்களுக்கு காசியில் குளித்த புண்ணியம் கிடைக்கும்,'' என்றார் சிவன்.
உடனே பார்வதிதேவி பயங்கரமான காளி வடிவில் இத்தலத்தில் தங்கினாள். ஒருமுறை பக்தன் ஒருவன் காளியின் முன் அமர்ந்து, அவளுக்கு சேவகம் செய்யும் வரம் வேண்டினான். அவனை குதிரை வடிவில் நின்று தனக்கு நிழல் கொடுக்குமாறு காளி அருள் செய்தாள்.
ஊர்ப்பெயர் காரணம்: ஒருமுறை உலகம் அழிந்த போது, மதுரை நகரம் வெள்ளத்தால் முற்றிலும் மறைந்துவிட்டது. வெள்ளம் வற்றியதும், ஆதிசேஷனிடம் மதுரையின் எல்லையை காட்டுமாறு மீனாட்சி அம்மன் கேட்டாள். அது தற்போது உள்ள மடப்புரத்தில் படத்தையும், வாலையும் ஒன்று சேர்த்து எல்லை காட்டியது. படமும், வாலும் சேர்ந்து இருந்த இடம். படப்புரம் என்றாகி, காலப்போக்கில் மடப்புரம் என மருவிவிட்டது.
சிறப்பம்சம்: சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்கள் சித்ரா பவுர்ணமி தோறும் இந்தக்காளியை வழிபட்டு வந்தனர். இங்குள்ள பூவணநாதர் கோயிலுக்கு எதிரே 'மணிகர்ணிகை தீர்த்தம்' உள்ளது. அது காசியில் உள்ள மண்கர்ணிகை கட்டத்துக்கு நிகரானது. இது தவிர பிரம்ம குண்டம் என்ற தீர்த்தமும் உள்ளது.
மன அமைதிக்கு பிரார்த்தனை: வேலு நாச்சியாரோடு பெரிய மருது சேர்வை வெள்ளிக்கிழமையில் முற்பகலில் நாட்டரசன்கோட்டை கண்ணாத்தாள் கோயிலிலும், நண்பகலில் மடப்புரம் ஐயனார், காளி கோயிலிலும் இரவு வழிபாடு செய்தும் பகைவர்களை வென்றதுடன், மன அமைதியும் பெற்றனர். குழப்பமான மனதுடன் இருப்பவர்களும், எதிரிகளால் அவதிப்படுபவர்களும் காளிக்கு எலுமிச்சை மாலையும், செவ்வரளி மாலையும் அணிவிப்பதன் மூலம் மனஅமைதி பெறுகின்றனர். எதிரிகளால் நிஜமாகவே பிரச்னையிருந்தால், காளி அவர்களை துவம்சம் செய்துவிடுவாள் என்று நம்புகின்றனர்.
நோய் தீர்க்கும் பிரசாதம்: காளியிடம் செய்த பிரார்த்தனை நிறைவேறியவுடன் எலுமிச்சை மாலை சாத்துவதை பிரதானமாக பக்தர்கள் கொண்டுள்ளனர். அசுர கோலத்துடன் இருக்கும் காளியை குளிர்ச்சிப்படுத்துவதற்காக எலுமிச்சை மாலை சாத்தி அம்மனுக்கு சிவப்பு நிற ஆடை அணிவித்து, பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். காளிக்கு சாத்துப்படி செய்த விபூதி, குங்குமத்துடன் எலுமிச்சம்பழம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதை சாப்பிட்டால் உடலிலுள்ள நோய்கள் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை.
கிரகதோஷம் விலக வழிபாடு: செவ்வாய் தோஷத்தால் திருமணம் ஆகாமல் உள்ளவர்கள் மூன்று செவ்வாய்க்கிழமைகள் நெய்விளக்கேற்றி அம்பாளை வழிபடுவதால் தோஷம் விலகி திருமணம் கைகூடுகிறது. வெள்ளிக்கிழமைகளில் வழிபடுவதால், குழந்தையில்லாதவர்களுக்கு பாக்கியம் கிடைக்கிறது. கல்வி, தனம் வேண்டுபவர்களும், வழக்குகள் வெற்றியடையவும், மனநலம் குன்றியவர்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபடுவதன் மூலம் கோரிக்கை நிறைவேறுகிறது.
கோயில் அமைப்பு: அடைக்கலம்காத்த அய்யனார், பத்ரகாளி அம்மன் ஆகிய தெய்வங்களுடன் சின்ன அடைக்கலம்காத்த சுவாமி, சின்னு (அரசதும்பம் பிகாசர்), வீரபத்திரர், காணியாண்ட பெருமாள், கருப்பணசாமி, öŒல்வ விநாயகர் உட்பட 11 சந்நிதிகளில் ஆட்சி தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர். அம்மனுக்கும், அய்யனாருக்கும் பன்னீர், சந்தனம், இளநீர், மஞ்சள், பால், தேன், எண்ணெய், நெய் திருமுழுக்கு செய்யப்படுகிறது.
திருவிழா: தமிழ்புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, நடு ஆடி, விநாயகர் சதுர்த்தி, ஐப்பசி தீபாவளி, திருக்கார்த்திகை, பொங்கல், சிவராத்திரி. தற்போது, கோயிலில் திருப்பணி வேகமாக நடக்கிறது. விரைவில் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது.
திறக்கும் நேரம்: காலை 6- இரவு 8.30 மணி.
இருப்பிடம்: மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து 20 கி.மீ., தூரம். பஸ் உள்ளது.
போன்: 04575 272411.

