/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
செவ்வாய் தோஷம் நீங்க நந்திக்கு தாலி கட்டுங்க!
/
செவ்வாய் தோஷம் நீங்க நந்திக்கு தாலி கட்டுங்க!
ADDED : ஜூன் 08, 2016 12:01 PM

செவ்வாய் தோஷம் நீங்க நந்தி பகவானுக்கு தாலி கட்டும் வழிபாடு திருநெல்வேலி அருகிலுள்ள கோடகநல்லூர் கைலாசநாதர் கோவிலில் நடக்கிறது. இது நவகைலாய தலங்களில் ஒன்றாகும்.
தல வரலாறு: பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முனிவர் இப்பகுதியில் தவம் செய்தார். அவருக்கு உதவியாக அவரது மகன் இருந்தார். ஒருமுறை அந்த மகன் தர்ப்பை, சுள்ளி பொறுக்க காட்டிற்குள் சென்று விட்டார். அப்போது ஒரு ராஜகுமாரன் அங்கு வந்தான். அவனுக்கு ராஜ்ய அபிவிருத்திக்காக யாகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. நிஷ்டையில் இருந்த முனிவரை எழுப்பி யாகம் செய்யும் முறை பற்றி கேட்க முயற்சித்தான். ஆனால், எவ்வளவோ எழுப்பியும் அவர் எழவில்லை.
கோபமடைந்த ராஜகுமாரன் ஒரு இறந்த பாம்பை எடுத்து முனிவரின் கழுத்தில் போட்டு விட்டு சென்று விட்டான். நிஷ்டையில் இருந்ததால் முனிவருக்கு பாம்பு கழுத்தில் கிடப்பது தெரியவில்லை. மகன் திரும்பி வந்தார். தந்தையில் கழுத்தில் பாம்பு கிடப்பதை பார்த்து கோபமடைந்தார். இந்த செயலை செய்தது ராஜகுமாரன் என்பது தெரிய வந்தது. அரண்மனைக்கு சென்று, “என் தந்தையின் கழுத்தில் போடப்பட்ட செத்த பாம்பு உயிர்பெற்று உன் தந்தையை தீண்டும்,” என சாபமிட்டு சென்று விட்டார். சில நாட்கள் கழித்து மகாராஜாவின் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர்கள் ராஜாவுக்கு சர்ப்பதோஷம் இருப்பதாக கூறினர். ராஜா பாம்பிடம் இருந்த தன்னை காத்துக்கொள்ள மிகவும் மறைவான இடத்தில் ஒரு மண்டபம் கட்டி வசித்தார். அதன் உள்ளே ஒரு எறும்புகூட புக வழியில்லை. ஒருநாள் ராஜா மாம்பழம் சாப்பிடும்போது உள்ளே இருந்த குட்டி பாம்பு ராஜாவை தீண்டிவிட்டது. ராஜா இறந்துபோனார்.
ராஜாவை தீண்டிய பாவம் நீங்க விஷ்ணுவை நோக்கி அந்த பாம்பு தியானம் செய்தது. விஷ்ணு அங்கு தோன்றி சிவபெருமானை வழிபட்டால் பாவம் நீங்கும் என்றார். அதன்படி சிவனை வழிபட்ட பாம்பு சாப விமோசனம் பெற்றது. பாம்பின் பாவத்தை போக்க சிவன்
கைலாயத்தில் இருந்து வந்ததால் 'கைலாசநாதர்' என்னும் பெயர் பெற்றார். அங்காரகன் என்னும் செவ்வாய் இங்கு சிவனை வழிபட்டார். அதனால் இது செவ்வாய் மற்றும் நாகதோஷ பரிகார தலமாகவும் உள்ளது. இங்கு சிவகாமி அம்மையும் காட்சி தருகிறாள்.
எட்டு முழத்தில் எட்டு வேட்டி: கொடிமரம், பலிபீடம், பரிவார மூர்த்திகள் என எதுவுமே இல்லாத இந்தக் கோவிலில். சுவாமி மட்டுமே பிரதானம். துவாரபாலகர்களின் இடத்தில் கல்யாண விநாயகர், முருகன் இருக்கின்றனர். நவ கைலாய தலங்களிலேயே பெரிய லிங்கம் இதுவே. எனவே இவருக்கு எட்டு முழத்தில், எட்டு வேட்டிகளை அணிவித்து அலங்கரிக்கிறார்கள். இங்கு ஐந்து தலை நாகத்தின்கீழ் காட்சி தரும் அனந்தகவுரி சிலை உள்ளது. இவளை, 'சர்ப்பயாட்சி', 'நாகாம்பிகை' என்றும் அழைக்கிறார்கள்.
நந்திக்கு தாலி: இங்குள்ள நந்திக்கு செவ்வாய் தோஷத்தால் திருமணம் தள்ளிப்போகும் ஆண், பெண்கள் 58 விரலி மஞ்சளை, தாலிக்கயிற்றில் கட்டி மாலையாக அணிவித்து வழிபடுகிறார்கள். இதனால் விரைவில் வரன் அமையும் என நம்புகிறார்கள். மேலும் சுவாமிக்கு துவரம்பருப்பு நைவேத்யம் படைத்து, சிவப்பு வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகும். மாத சிவராத்திரி, திருவாதிரை, பிரதோஷ நாட்களில் இந்த வழிபாட்டை செய்வது மிகவும் விசேஷம். மனித வாழ்க்கையில் செவ்வாய் திசை ஏழு ஆண்டுகள் நடக்கும். இந்த ஏழு ஆண்டுகளில் செவ்வாய் பகவானின் அருள் இருந்தால் தான் வாழ்க்கை செம்மையாக நடக்கும். சிலருக்கு ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம் பெற்றிருக்கும் (சக்தி இழந்திருக்கும்). இவர்களும் பரிகார பூஜை செய்து வரலாம்.
இருப்பிடம்: திருநெல்வேலி பழைய பஸ்ஸ்டாண்ட்- சேரன்மகாதேவி சாலையில் 17 கி.மீ., தூரத்தில் நடுக்கல்லூர். இங்கிருந்து பிரியும் சாலையில் 2 கி.மீ., தூரத்தில் கோவில்.
திறப்பு நேரம்: காலை 7.00 - 12.00 மணி, மாலை 4.30 - 7.00 மணி.
அலைபேசி: 99659 23124.

