
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி கோவிலில் அமாவாசையன்று வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.
தல வரலாறு: தட்சனின் மகளான தாட்சாயணி சிவபெருமானை மணம் புரிந்தாள். சிவனுக்கு மாமனாராகி விட்ட மமதை தட்சனை ஆட்டிப்படைத்தது. ஒருமுறை மருமகன் சிவனைக் காண கைலாயம் வந்த தட்சனை நந்தி தடுத்தார். இதனால் கோபமடைந்த தட்சன், சிவனை அழைக்காமல் யாகம் ஒன்றை நடத்தினான். தந்தையின் கர்வத்தை அடக்க, தாட்சாயணி அகோர வடிவெடுத்து யாக குண்டத்தை அழித்தாள். அந்த உக்கிர வடிவம் அங்காளி என பெயர் பெற்றது. சிவனும் அவளைத் தன் தோளில் சுமந்து ஆங்கார நடனம் ஆடினார். அப்போது அங்காளியின் கை துண்டாகி பூலோகத்தில் விழுந்தது. அந்த இடம் தண்டகாரண்யம் என்னும் சக்தி பீடமானது. அந்த பீடத்தின் ஒரு பகுதியே மேல்மலையனூர் தலமாகும். இங்கு கருவறையில் அம்மன் சுயம்பு மூர்த்தியாக (தானாக தோன்றியவள்) இருக்கிறாள். வில்வமரம் தல விருட்சமாக உள்ளது.
தவமிருக்கும் அம்பிகை: பர்வதராஜனின் மகளாக பார்வதி சிவனை மணந்து கைலாயத்தில் இருந்தாள். அப்போது சிவன், பிரம்மா இருவருக்கும் ஐந்து தலைகள் இருந்தன. ஒருமுறை பிரம்மா சிவனைப் பார்ப்பதற்காக கைலாயம் வந்தார். அப்போது பார்வதி கவனக் குறைவாக ஐந்து தலையுடன் வந்தவர் சிவன் எனக் கருதி, பிரம்மாவின் காலில் விழுந்து விட்டாள். நிமிர்ந்து பார்த்த போது தான், அவர் பிரம்மா என்பதை அறிந்து வருந்தினாள். இருவருக்கும் ஐந்து தலை இருக்கக்கூடாது என முடிவெடுத்தாள். பிரம்மனின் ஒரு தலையைக் கொய்யும்படி சிவனிடம் வேண்டினாள். அதனை ஏற்ற சிவனும் பிரம்மாவின் ஒரு தலையை கிள்ளி எறிந்தார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்திதோஷம் ஏற்பட்டது. தோஷம் நீங்கவும், கலியுகத்தில் மக்களுக்கு அருள்புரியவும் பார்வதியே புற்று வடிவில் அங்காளபரமேஸ்வரியாக மேல்மலையனூரில் தவமிருக்கிறாள். இவளை அமாவாசையில் வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.
மூதாட்டி கோலம்: பிரம்மாவின் தலையைக் கொய்ய காரணமான பார்வதி மீது சரஸ்வதி கோபம் கொண்டாள். “என் கணவரின் (பிரம்மா) தலையைக் கொய்வதற்கு காரணமானதால் கோர வடிவைப் பெறுவாய்” என்று சபித்தாள். இதனால் பார்வதி மேல்மலையனூரில் கோர உருவத்தில் தங்கியிருந்தாள். இதன் பின் திருவண்ணாமலையிலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சாபம் நீங்கப் பெற்று, மூதாட்டி கோலம் பெற்று இங்கு வந்தாள். மலையனூரில் வாழும் மீனவர்கள், இந்த அம்மனுக்கு கோவில் எழுப்பி வழிபாடு செய்யத் தொடங்கினர்.
இருப்பிடம்: திருவண்ணாமலையில் இருந்து 35 கி.மீ.,
திறக்கும் நேரம் : காலை 7.00 - 12.00 மணி, மதியம் 2 .00 - இரவு 8.00 மணி. அமாவாசை இரவில் நடை அடைப்பதில்லை.
தொலைபேசி : 0415 - 234 234, 234 229.

