ADDED : செப் 29, 2017 11:30 AM

நவராத்திரி நாயகி மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலில் நடக்கும் தசரா விழா உலகப்புகழ் மிக்கது.
தல வரலாறு: தேவர்களை கொடுமைப்படுத்திய மகிஷாசுரனை அழித்த அம்பிகை, மைசூரு மலையில் சாமுண்டீஸ்வரியாக வீற்றிருக்கிறாள். ஆயிரம் ஆண்டு பழமையான இக்கோயிலை, 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹோய்சாள மன்னர் விஷ்ணுவர்த்தன் புதுப்பித்தார். 1573ல் மைசூருவை ஆட்சி செய்த நான்காம் சாம்ராஜ உடையார், புயல் மழையில் சிக்கிய போது, அம்மன் அருளால் உயிர் பிழைத்தார். அதற்கு நன்றிக்கடனாக கோயிலை விரிவுபடுத்தினார்.
கோயில் அமைப்பு: நவரங்க மண்டபம், அந்தராளம், பிரகாரம், கருவறை என நாற்கர வடிவில் கோயில் கட்டப்பட்டுள்ளது. ஏழு தங்க கலசம் கொண்ட ஏழு நிலை ராஜகோபுரம் உள்ளது. கருவறையில் எட்டு கைகளுடன் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் அம்மன் சிலை, மார்க்கண்டேய மகரிஷியால்
பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். நந்தினி, கமலினி என்னும் அம்மனின் தோழிகள் துவாரபாலகியராக காவல் புரிகின்றனர். கருவறைக்கு வலப்புறத்தில் பைரவர் சன்னதி உள்ளது.
தேவியருடன் மன்னர்: 1827ல் மன்னர் கிருஷ்ணராஜ உடையார் திருப்பணி செய்ததோடு, அம்மனுக்குரிய ஆபரணம், வாகனங்களை தானம் அளித்தார். உள்பிரகாரத்தில் இவரது ஆறடி உயர சிலை உள்ளது. பட்டத்தரசிகளான ராம விலாசம், லட்சுமி விலாசம், கிருஷ்ண விலாசம் ஆகியோர் உடனிருக்கின்றனர்.
தசரா விழா: 1610ம் ஆண்டு முதல் நடக்கும் தசரா, தற்போது கர்நாடக அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. மைசூரு அரண்மனை முழுவதும்
மின்னொளியால் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும். முக்கிய நிகழ்ச்சியான விஜயதசமியன்று இரவு நடக்கும் யானை ஊர்வலத்தில் அம்மன் தங்க
சிம்மாசனத்தில் எழுந்தருள்வாள்.
எப்படி செல்வது: மைசூருவில் இருந்து 13 கி.மீ.,
விசேஷ நாட்கள்: தசரா பத்து நாள் விழா, விஜயதசமியன்று தர்பார் காட்சி
நேரம்: காலை 6:00 - 2:00 மணி மதியம் 3:30 - 9:00 மணி (வெள்ளியன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும்)
தொடர்புக்கு: 0821- 259 0127, 259 0027
அருகிலுள்ள தலம்: 13 கி.மீ.,ல் அரண்மனை பிரசன்ன கிருஷ்ணசுவாமி கோயில்