/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
புவனம் காக்கும் புன்னைநல்லூர் மாரி
/
புவனம் காக்கும் புன்னைநல்லூர் மாரி
ADDED : ஆக 04, 2017 12:40 PM

ஆக.13- முத்துப்பல்லக்கு விழா
தஞ்சாவூர் புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் கோயிலில், ஆடியில் நடக்கும் முத்துப்பல்லக்கு விழா பிரசித்தி பெற்றது.
தல வரலாறு: இப்பகுதியை ஆண்ட கீர்த்தி சோழனுக்கு குழந்தை இல்லை. புன்னைநல்லூர் மாரியம்மனை வணங்கி குழந்தை பாக்கியம் பெற்றான். தன் மகனுக்கு தேவசோழன் என பெயரிட்டான். அவனது ஆட்சிக்காலத்துக்குப் பின் கோயில் மண்ணுக்குள் புதைந்தது. 1680ல் தஞ்சாவூரை ஆட்சி செய்த வெங்கோஜி மகாராஜா, ஒருமுறை சமயபுரத்தில் தங்கினார். அவரது கனவில் தோன்றிய அம்மன், தஞ்சாவூர் அருகிலுள்ள புன்னைக் காட்டில் ஒரு புற்றில் தான் இருப்பதை தெரிவித்தாள். அதன்படி சிலையை மீட்டு வழிபாடு துவங்கியது.
1728ல், தஞ்சாவூரை ஆண்ட துளஜா ராஜாவின் மகள், அம்மை நோயால் பார்வை இழந்த நிலையில், அம்மன் அருளால் குணம் பெற்றாள். இதற்கு நன்றிக்கடனாக துளஜா ராஜா மாரியம்மனுக்கு கோயில் எழுப்பினார்.
புற்று வடிவில் அம்மன்: அம்மன் ஆறடி உயரத்தில் புற்று வடிவில் இருக்கிறாள். புற்று மண்ணால் ஆனதால் அம்மனுக்கு தைலக்காப்பு மட்டும் நடக்கிறது. கோடை காலத்தில் அம்மன் முகத்தில் முத்து முத்தாக வியர்ப்பதால் 'முத்துமாரி' எனப்படுகிறாள். சதாசிவ பிரம்மேந்திரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்ரம் இங்குள்ளது. பிரகாரத்தில் விநாயகர், முருகன், காத்தவராயன், மதுரை வீரன், லாட சன்னாசி, பேச்சியம்மன், அய்யனார், பாடகச்சேரி ராமலிங்க சுவாமி சன்னதிகள் உள்ளன.
மாவிளக்கு வழிபாடு: அம்மை, தோல் வியாதி, கண் நோய், வயிற்றுவலி, கட்டியால் அவதிப்படுபவர்கள் நேர்த்திக்கடனாக மாவிளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். வெல்லக்குளத்தில் வெல்லம் கரைக்கின்றனர். முடி காணிக்கை, பால்குடம், பால் காவடி, அக்னி சட்டி ஆகிய நேர்த்திக் கடன்களும் உண்டு.
முத்துப்பல்லக்கு விழா: இங்கு 35அடி நீளம், 12அடி அகலம், 50 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட முத்துப்பல்லக்கு உள்ளது. மூங்கில் குச்சிகளால் அலங்கார வடிவங்கள் செய்து அதன் மீது முத்து பதிப்பர். ஆக.13, காலை 9:00 மணிக்கு பக்தர்கள் புன்னை நல்லூர் கைலாசநாதர் கோயிலிலிருந்து பால்குடம் எடுத்து வருவர். மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடக்கும். இரவு 8:00 மணிக்கு நான்கு ராஜ வீதிகள் வழியாக விடிய விடிய பல்லக்கு பவனி வரும்.
எப்படி செல்வது: தஞ்சாவூரில் இருந்து 7 கி.மீ.,
நேரம்: திங்கள்-சனி: அதிகாலை 5:30 - இரவு 9:00 மணி; ஞாயிறு: அதிகாலை 4:30 - இரவு 10:30 மணி தொடர்புக்கு: 04362- 267 740

