ADDED : பிப் 04, 2011 02:29 PM

பிப்.10 ரத சப்தமி
வேதத்தில் சூரியவழிபாடு
உலகத்தின் உயிராகச் சூரியதேவன் விளங்குகிறார். வேதகாலம் முதலே சூரியனைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. ரிக்வேதம் சூரியனை மூன்றுவித அக்னியில் ஒன்றாக விவரிக்கிறது. யஜுர்வேதம் 'சகல உலகங்களையும் ஒளிபெறச் செய்பவன்' என்று போற்றுகிறது. அதர்வண வேதம் 'சூரியனை வழிபட்டவர்கள் இதயநோயிலிருந்து விடுபடுவர்' என்று வழிகாட்டுகிறது. மிகப்பழங்காலத்தில் சூரியவழிபாடு வடமாநிலங்களில் பரவி இருந்த காலத்தில் வன்முறை வழிபாடாக சூரியனுக்கு ரத்தத்தை அர்க்கியமாக (கைகளில் வார்த்து சூரியனுக்குச் சமர்ப்பித்தல்) இருந்து வந்தது. இப்பழக்கத்தை ஒழித்தவர் ஆதிசங்கரர்.
ஆதிகாலத்தில் சூரிய உபாசனையை மந்திரப் பூர்வமாக செய்துவந்தனர். பின்னர் உருவவழிபாட்டில் சூரியனை வழிபடத் தொடங்கினர். புராணங்களில் சூரியனுடைய ரூபலட்சணம் பலவிதங்களில் வர்ணிக்கப்படுகிறது. சிவ ஆகமங்களில் சூரிய மண்டலத்தின் நடுவே சிவபெருமான் உறைந்திருப்பதாக கூறுகின்றன. அதனால் தான் சிவபெருமானுக்கு 'சிவசூரியன்' என்றொரு திருநாமம் உண்டு. சூரியன் சிவனின் அஷ்டமூர்த்தங்களில் ஒருவராகவும், வலது கண்ணாகவும் இருக்கிறார்.
சிவசூரிய நாராயணர் கோயில்
தமிழகத்தில் சூரியனுக்காக அமைந்துள்ள தலம் சூரியனார் கோயில். முதலாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டது. இம்மன்னனின் பெயராலேயே இங்குள்ள இறைவன் 'குலோத்துங்க சோழ மார்த்தாண்டாலய தேவர்' என்று குறிக்கப்படுகிறார். கருவறையில் சூரியன் மேற்குநோக்கி காட்சி தருகிறார். உஷா,பிரத்யுஷா என்னும் இருதேவியரும்
உடன் வீற்றிருக்கின்றனர். நவக்கிரக மண்டபத்தில், ஆகமவிதிப்படி சூரியன் நடுநாயகமாக இருக்க, சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோர் நான்குநேர் திசையிலும், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோர் நான்கு மூலைகளிலும் அமைக்கப்படவேண்டும். அம்முறைப்படி இந்த கோயில் அமைந்துள்ளது சிறப்பு. குரு தன் அருட்பார்வையால் சூரியனுக்கு எதிரே அமர்ந்து அவரின் உக்கிரத்தை தணிக்கிறார்.
குடை தானம் செய்யுங்க!
உத்தராயண புண்ணியகாலமான தை முதல் ஆனி வரையிலான காலத்தில் மட்டுமே சூரியனுக்குரிய சப்தமி விரதத்தை தொடங்கவேண்டும். வளர்பிறை சப்தமியில் இவ்விரதத்தை மேற்கொள்வர். குறைந்தபட்சம் தொடர்ந்து ஏழு சப்தமி நாட்களுக்கு விரதத்தைத் தொடர வேண்டும். சூரியதிசை, சூரியபுத்தி நடப்பவர்கள் இவ்விரதத்தை மேற்கொண்டால் நன்மை உண்டாகும். பாவங்களைப் போக்கி புண்ணிய பலன்தரும் விரதம். சப்தமி விரதம் மேற்கொள்பவர்கள் சூரியனின் வெம்மையிலிருந்து தப்பிக்க உதவும் செருப்பு, குடைகளைத் தானம் கொடுப்பது நல்லது. சூரியனுக்குரிய ஸ்தோத்திரங்கள், ஆதித்ய ஹ்ருதயம் போன்ற துதிகளைப் பாராயணம் செய்யலாம். இதனால், ஆரோக்கியமும் தீர்க்க ஆயுளும் உண்டாகும்.
உலகநாடுகளில் சூரியவழிபாடு
நம் நாட்டில் மட்டுமின்றி உலகம் எங்கிலும் சூரியவழிபாடு பலகாலமாக இருந்து வந்துள்ளது. 3000 ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தியர்கள் சூரியனை வழிபட்டு வந்துள்ளனர். அந்நாட்டை ஆண்ட பாரோ வம்சத்து அரசர்கள் தங்களை சூரியன் வழி வந்தவர்களாக கருதினர். அங்கும் உழவுத்தொழில் சிறக்க சூரியனை மக்கள் வழிபட்டனர்.
பாரசீகர்களின் வேதநூலான ஜெந்த் அவெஸ்தாவில் மித்ரன் என்ற பெயரில் சூரியன் குறிக்கப்படுகிறார். மித்ரன் என்ற பெயர் சூரியனுக்கு உண்டு. மாகர்கள் எனப்படும் பாரசீகர்கள் சூரிய ஆராதனைக்காக இந்தியா வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். கிரேக்கர்கள் சூரியனை 'அபொல்லோ' என்ற பெயரிலும், ரோமானியர்கள் 'ஹைபீரியன்' என்னும் பெயரில் வழிபட்டனர். தென்அமெரிக்காவிலுள்ள பெருநாட்டில் இன்காஸ் இனத்தவர்களிடமும் சூரியவழிபாடு இருந்தது.