ADDED : மே 12, 2023 04:37 PM

சித்தர்கள் ஆசி வேண்டுமா. சீரான வாழ்வு பெற விரும்புகிறீர்களா வாருங்கள் சீர்காழி நாதர் கோயிலுக்கு...
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வாழ்ந்த மக்கள் கடும்குளிர் காய்ச்சலால் அவதிப்பட்டார்கள். அத்துன்பத்தில் இருந்து விடுபட அங்கு அடியார்களுடன் வந்த சிவனடியாரான திருஞானசம்பந்தரிடம் வேண்டினார்கள். அவரும் அர்த்தநாரீஸ்வரரை பாடல்களால் வழிபாடு செய்தார். அதனால் அவர்களுடைய குளிர் காய்ச்சல் நீங்கப்பெற்றன. பின்னர் காவிரிக்கரையில் இருக்கும் தலங்களை நோக்கி பாதயாத்திரையை அடியார்களோடு தொடங்கினார் திருஞானசம்பந்தர். அவருடன் வந்திருந்த பலர் ஒரிடத்தில் இளைப்பாறினார்கள். அவர்களுக்கு அவ்விடம் பிடித்து விடவே அங்கேயே தங்கினார்கள்.
அன்று முதல் அது சித்தாளந்துார் என பெயர் பெற்றது. இன்றும் இப்பகுதிகளில் சித்தர்கள் சமாதி கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன. அவர்களால் வழிபாடு செய்யப்பட்ட சிவலிங்கம் பல ஆண்டுகளாக சிறு கோயிலாக இருந்தன. அதனை ஊர்மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விரிவாகவும் பெரிய கோயிலாகவும் கட்டியுள்ளனர். கருவறையில் எழுந்தருளி இருக்கும் சீர்காழிநாதர் சிறப்பான வாழ்வினை வழங்குகிறார். தெற்கு பார்த்த சன்னதியில் குருவடிவில் திகழும் சிவகாமிஅம்பாள் ஞானத்தை வாரி வழங்குகிறாள். சன்னதியில் நினைக்கும் நற்செயல் யாவும் சிறப்பாக நிறைவேறுகின்றன.
ராஜகோபுரத்துடன் காணப்படும் இக்கோயில் பிரகாரத்தில் திருஞானசம்பந்தருக்கு தனிச்சன்னதி உள்ளது. பன்னிரு ஜோதிலிங்க தலங்களில் உள்ள மூலஸ்தான மூர்த்திகளை போலவே இக்கோயிலிலும் சன்னதியை எழுப்பியுள்ளனர். விநாயகர், முருகர், பைரவர், அனுமன், சப்தமாதர்கள், அறுபத்து மூவர் சன்னதிகளும் உள்ளது. வழக்கமாக சிவன்கோயில்களில் நடைபெறும் அனைத்து வழிபாடுகளும் சிறப்பாக நடைபெறுகின்றன. தலமரம் வில்வம்.
எப்படி செல்வது: திருச்செங்கோட்டில் இருந்து 7 கி.மீ.,
விசேஷ நாள்: வைகாசி மூலம் மஹா சிவராத்திரி, பிரதோஷம்
நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 5:00 - 7:00 மணி
தொடர்புக்கு: 81441 62123
அருகிலுள்ள தலம்: அருணகிரி ஐயம்பாளையம் முருகன் கோயில் 10 கிமீ.,
நேரம்: காலை 7:00 - 11:00 மணி; மாலை 5:00 - 7:00 மணி
தொடர்புக்கு: 94432 18319

