ADDED : ஜூலை 08, 2016 10:55 AM

ஜூலை 10 ஆனி திருமஞ்சனம்
நடராஜருக்கும் காளிக்கும் நடனப்போட்டி நடந்த தலம் திருவாலங்காடு. பஞ்ச சபைகளில் ரத்தினசபையாக இத்தலம் திகழ்கிறது. சிதம்பரம் போல ஆலங்காட்டிலும் ஒரு ரகசியம் இருக்கிறது. இங்குள்ள அம்பாளை ஆச்சரிய அம்பிகை என்கின்றனர்.
தல வரலாறு: ஒருமுறை சிவன் தியானத்தில் இருந்த போது, அசுரர்களின் தொல்லை அதிகரித்தது. இதைத் தாங்க முடியாத தேவர்கள் மன்மதன் மூலமாக அவரை எழுப்பினர். தன் தியானத்தைக் கலைத்த மன்மதனை சிவன் நெற்றிக்கண்ணால் எரித்து விட்டார். அவரது உக்கிரத்தை தாங்க முடியாத தேவர்களும், மகரிஷிகளும் கோபம் தணியும்படி வேண்டினர். சிவனும் கோபம் தணிந்து ஒரு ஆலமரத்தடியில் லிங்க வடிவில் எழுந்தருளினார். இதனால் சிவனுக்கு 'ஆலங்காட்டு அப்பர்' என்றும், அந்த தலத்திற்கு திரு ஆலங்காடு என்றும் பெயர் ஏற்பட்டது.
ரத்தின சபை: ஒருசமயம் தேவர்கள் அசுரர்களிடமிருந்து தங்களைக் காக்கும்படி சிவனை வேண்டினர். அவர் அம்பிகையின் அம்சமான காளியை அனுப்பினார். அவர்களை அழித்ததால் காளிக்கு அசுரத்தன்மை உண்டானது. தேவர்களுக்கு காளியாலும் பிரச்னை ஏற்பட்டது. மீண்டும் தேவர்கள்
சிவனைச் சரணடைந்தனர் காளி பெரிதா, சிவன் பெரிதா என்னும் அளவு பிரச்னை போகவே, இருவருக்குமிடையே நடனப்போட்டி வைப்பதென்றும், அதில் சிவன் வென்றால் காளி, தன் அசுரத்தன்மையை விட்டுவிட வேண்டுமென்றும் ஒப்பந்தமானது. போட்டியில் சிவன் ஊர்த்துவ நடனமாடி வெற்றி பெற்றார். காளியும் சாந்தமானாள். அவர்கள் நடனமாடிய சபை ரத்தினத்தால் அலங்கரிக்கப்பட்டதால் ரத்தின சபை எனப்பட்டது.
ஆலங்காட்டு ரகசியம்: சிதம்பரம் போல ஆலங்காட்டிலும் ரகசியம் ஒன்றுள்ளது. காரைக்காலம்மையார் இங்குள்ள நடராஜர் சன்னிதியின் பின்புறத்தில் உள்ள அறையில் ஐக்கியமாகி இருக்கிறார். தற்போதும் சிவ பெருமானின் நடனத்தை இவர் தரிசிப்பதாக ஐதீகம். இதை ஆலங்காட்டு ரகசியம் என்கின்றனர்.
ஆச்சரிய அம்பிகை: நடராஜரின் அருகிலுள்ள சிவகாமியை ஆச்சரிய அம்பிகை என்கின்றனர். சிவனுக்கு ஈடு கொடுத்து, காளி நடனம் ஆடியதைக் கண்ட அம்பிகை ஆச்சரியப்பட்டாள். இதனால் அவளுக்கு 'சமிசீனாம்பிகை' என்று பெயர் சூட்டப்ட்டது. 'இதற்கு ஆச்சரியம் அடைந்தவள்' என்று பொருள். இடது கை நடுவிரலை மடக்கி, கன்னத்தில் கை வைக்கப் போகும் விதத்தில் முகத்தில் வியப்பை வெளிப்படுத்தும் இந்த சிலையின் அமைப்பை பார்த்துக் கொண்டே இருக்கலாம். நடராஜர் ஆடிய போது, அவரது உக்கிரம் தாங்காத தேவர்கள் மயக்கத்திற்கு ஆளாயினர். சுவாமி அவர்களைத் தன் தலையிலிருந்த கங்கை நீரைத் தெளித்து எழுப்பினார். இதனடிப்படையில் இங்கு பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்படுகிறது.
நடுவர் இருவர்: சுனந்தரிஷி என்பவர் சிவநடனம் காண விரும்பி தவமிருந்தார். இவரைச் சுற்றி புற்று வளர்ந்து நாணல் புல் மூடியது. இதனால் இவருக்கு முஞ்சிகேசர் (முஞ்சி நாணல்) என பெயர் வந்தது. அதே சமயம், கார்கோடகன் என்ற நாகமும், செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டி இங்கு தவமிருந்தது. இருவருக்கும் அருளிய சிவன், நடன போட்டிக்கு அவர்களை நடுவராக இருக்கச் செய்தார். சிவ நடனத்தைக் காணும் பேறு இருவருக்கும் கிடைத்தது.
நாட்டிய காளி: கோஷ்டத்தில் துர்கா பரமேஸ்வரரும், பிரகாரத்தில் வடக்கு நோக்கி சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் இருக்கின்றனர். பிரகாரத்தில் ஒரே வரிசையில் எட்டு விநாயகர்கள் உள்ளனர். நாய் இல்லாத பீஷண பைரவர், உபதேச தட்சிணாமூர்த்தி ஆகியோரும் இங்குள்ளனர். நடராஜருடன்
போட்டியிட்ட காளிதேவிக்கு தனிக்கோவில் உள்ளது. இவள் காலை தூக்க முயன்ற நிலையில் நாட்டிய காளியாக சாந்தமாக வீற்றிருக்கிறாள்.
இருப்பிடம்: சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் ரயில்களில் 55 கி.மீ., கடந்தால் திருவாலங்காடு. இங்கிருந்து 5 கி.மீ. ஆட்டோவில் செல்ல வேண்டும். திருவள்ளூரில் இருந்து 18 கி.மீ.,
நேரம்: காலை 6,00 - இரவு 8.00 மணி.
தொலைபேசி: 044 - 2787 2074

