/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
வைராக்கியம் தரும் வசிஷ்டர் கோயில்
/
வைராக்கியம் தரும் வசிஷ்டர் கோயில்
ADDED : ஏப் 06, 2023 09:31 AM

புகழ் பெற்ற சப்த ரிஷிகளில் ஒருவர் வசிஷ்டர். இவர் வேதத்தில் உள்ள பல ஸ்லோகங்களை உருவாக்கியவர். படைக்கும் கடவுள் பிரம்மாவின் புதல்வர். சூரியகுல மன்னர்களுக்கு குலகுருவாக திகழ்ந்தவர். ராமரின் குருவும் இவரே. தமிழகத்தில் வசிஷ்டர் வழிபட்ட கோயில்கள் பிரபலம். இவருக்கு இமாசலப்பிரதேசத்தில் குல்லுா மாவட்டத்தில் மணாலி அருகே வசிஷ்ட் என்ற இடத்தில் கோயில் உள்ளது.
வானில் நட்சத்திரமாய் ஜொலிக்கும் இவரின் மனைவியான அருந்ததியை புதிதாக திருமணமான தம்பதியர் பார்த்தால் அவர்கள் நீண்ட ஆயுளுடன் ஆனந்தத்துடன் வாழ்வர் என்ற தத்துவம் புகழ் பெற்றது.
ஒருசமயம் இவருடைய மகன் சக்திக்கும் அரசனான கல்மசபாதனுக்கும் போர் ஏற்பட்டது. இதில் சக்தியின் சாபத்தால் அரக்கனான கல்மசபாதன் வசிஷ்டரின் மீதி குழந்தைகளை கொன்றான். இதனால் புத்திர சோகத்தில் வாழ பிடிக்காமல் கங்கையிலும், விபாசா என்ற பெயருடைய பியாஸ் நதியிலும் விழுந்து இறக்க முயற்சித்தார் வசிஷ்டர். இரண்டு முறையும் உயிர் பிழைத்த அவர், தெய்வம் நினைத்தால் மட்டுமே உயிரை விட முடியும் என்பதை புரிந்து கொண்டார். அந்த நதிக்கரையில் ஆசிரமம் அமைத்து பல ஆண்டுகள் மக்களுக்கு தொண்டு புரிந்தார். தடைகளை அகற்றும் என பொருள் கொண்ட இந்த நதியை ரிக்வேதம் வர்ணிக்கிறது.
நேபாள கட்டடக்கலைப் பாணியில் கட்டப்பட்ட இக்கோயில் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. கருவறையில் பஞ்சகட்சம், ருத்ராட்ச மாலை அணிந்து திருநாமம் இட்டு காட்சி தரும் வசிஷ்டரை தரிசிப்பவருக்கு அவரைப்போலவே வைராக்கியம் உண்டாகும். சிவலிங்கம், ராமர் சன்னதிகளும் உள்ளன. கோயிலுக்கு அருகே காணப்படும் லட்சுமணரால் உருவாக்கப்பட்ட வெந்நீர் குளத்தில் நீராடுவோருக்கு தோல் நோய் நீங்கும்.
எப்படி செல்வது: மணாலியிலிருந்து 3.5 கி.மீ.,
விசேஷ நாள்: ஸ்ரீராமநவமி, சிவராத்திரி
நேரம்: காலை 7:00 - இரவு 9:00 மணி
தொடர்புக்கு: 0177 - 265 8302
அருகிலுள்ள தலம்: குகை அருகில் நிடும்பா கோயில் 4 கி.மீ.,
நேரம்: காலை 8:00 - மாலை 6:00 மணி
தொடர்புக்கு: 0177 - 262 5924

