sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மனமே விழித்தெழு (22)

/

மனமே விழித்தெழு (22)

மனமே விழித்தெழு (22)

மனமே விழித்தெழு (22)


ADDED : அக் 04, 2019 05:36 PM

Google News

ADDED : அக் 04, 2019 05:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிலையற்ற மனம், குழப்பம், பதட்டம், அழிக்கும் மனநிலை (Destructive Mindset), மாயத் தோற்றம் (Delusion), எதிர்மறை சிந்தனை, மனச்சோர்வு, அக்கறையின்மை, சோம்பல், வன்முறை, தீய எண்ணம் இவை தமோ குணத்தின் வெளிப்பாடு.

சற்றே யோசியுங்கள். அடுத்த பத்து ஆண்டுகளில் புதிய மாற்றங்கள் பல வரப் போகின்றன. அவை இரண்டு விதத்தில் அமையலாம். ஒன்று நம்மை முன்னேற்றும் மாற்றம் அல்லது நம்மை அழிக்கும் மாற்றம். இதில் எதுவானாலும் அதனால் பயன் அடைவதோ, பாதிக்கப்படுவதோ நாம் தான். ஆனால் ஒன்றை மட்டும் இங்கு புரிந்து கொள்ள வேண்டும். மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றம் என்பது நம்மைக் கேட்டுக் கொண்டு வராது. நாம் தான் புத்திசாலித்தனமாக சூழலுக்கு தக்கபடி மாற வேண்டும்.

பரிமாண வளர்ச்சி பற்றி (Theory of Evolution) ஆய்வு செய்த சார்லஸ் டார்வின் 'பிரமாண்டமான மிருகங்களை விட கால மாறுதலுக்கு ஏற்ப தன்னை மாற்றும் உயிரினமே நிலைக்கும்' என்றார். மனித வர்க்கத்தை விட பல மடங்கு பிரமாண்டமான உயிரினங்கள் கூட அழிந்தன. உதாரணமாக டைனோசரஸ், ஜூராசிக் பார்க் போன்ற ஆங்கிலப் படங்களைப் பார்த்திருப்பீர்கள். இதில் டைனோசரஸ் என்ற மிருகம் பலமானது. அதன் உடலை ஏகே 47 துப்பாக்கி குண்டும் துளைக்க முடியாது. ஆனால் இன்று அதன் சுவடு கூட இல்லை. ஏன் என ஆராய்ந்த போது, டைனோசரசின் காலை பாம்பு கடித்தால் கூட, அந்தச் செய்தி அதன் மூளையை அடைய பல மாதமாகும். அதற்குள் விஷம் ரத்தத்தில் பரவி அது இறக்கும். ஆக, தனக்கு ஆபத்து வருகிறது என்ற தகவல் கிடைத்த நேரத்தில் இருந்து, அதிலிருந்து எப்படி காப்பாற்றுவது என சிந்தித்து செயல்படும் நேரம் மிக குறைவாக இருக்க வேண்டும். இதை ஆங்கிலத்தில் 'ரிப்ளக்ஸ் டைம்' (Reflex Time) என்பர்.

இது அன்றாட வாழ்வுக்கும் பொருந்தும். நம் வாழ்வும், செய்யும் பணியும் நிரந்தரமானது என நினைக்கிறோம். ஆனால் கடந்த காலத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் எவ்வளவு வேலைகள், பொருட்கள் மறைந்தன என்பதை யோசியுங்கள். உங்கள் வாழ்வில் 30 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று நீங்கள் பயன்படுத்திய பொருட்களை யோசியுங்கள். டேப் ரிக்கார்டர், சைக்கிள்

ரிக் ஷா, டைப் ரைட்டர், கட்டை பேனா? பவுண்டன் பேனா? கரி அடுப்பு? மண்ணெண்ணெய் ஸ்டவ்? இப்படி பட்டியல் நீளும். இவற்றை நம்பி எவ்வளவு பேர்கள் வேலை செய்தனர் தெரியுமா? ரிக் ஷாவில் ஏறி நாம் பயணித்தால் அதை ஓட்டியவருக்கு பணம் கொடுத்தோம். அதனால்

ரிக் ஷாவோடு அவரின் வாழ்க்கைச் சக்கரமும் ஓடியது அல்லவா? ஆனால் இன்று ரிக் ஷா சவாரிக்காக அவர் காத்திருந்தால் என்னாகும்?

காலத்திற்கு ஏற்ப புதிய வேலைகளை, அதற்கான தொழில் நுட்பத்தைக் கற்க வேண்டாமா? மாற்றத்தை ஏற்கவில்லை என்றால் யாருக்கு நஷ்டம்? 1960ல் பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் நாடு தழுவிய வேலை நிறுத்தம் வந்தது. காரணம்? எங்கள் நிறுவனத்தில் கம்ப்யூட்டர்களைப் புகுத்தினால் எங்களுக்கு வேலை இல்லாமல் போகும். 'கம்ப்யூட்டரை புகுத்த மாட்டோம்' என அரசு உறுதி தரும் வரை வேலை நிறுத்தம் என்றனர். இருந்தாலும் வாடிக்கையாளர் நலன் கருதி கம்ப்யூட்டரை நிறுவனம் புகுத்தியது. 20 ஆண்டுக்குப் பின், அதே நிறுவனத்தில் மீண்டும் வேலை நிறுத்தம் செய்தனர். காரணம்? எங்களில் சிலருக்குத் தான் கம்ப்யூட்டர் அளித்துள்ளனர். அனைவருக்கும் கம்ப்யூட்டர் என்ற கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்தம் என்றனர்.

இதற்கு காரணம் தமோ குணம். நான் ஏன் புதிதாக தொழில்நுட்பம் கற்க வேண்டும்? என்னைப் புதிய தொழில்நுட்பத்தைக் கற்கச் சொல்ல நீங்கள் யார்? இதுவே தமோ குணத்தின் வெளிப்பாடு.

சோம்பல், அதிக துாக்கம் கூட அதன் வெளிப்பாடே. அன்றாட வாழ்விற்கு ௭ மணி நேர துாக்கம் அவசியமானது. ஆனால் துாக்கமே வாழ்க்கையாகி விடக் கூடாது. 'நல்ல பொழுதை எல்லாம் துாங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்தது உடன் தானும் கெட்டார்' என்ற பாடலை மறக்கலாமா?

ஒரு நாளின் 24 மணி நேரத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும். எட்டு மணி நேரம் உழைப்பு. எட்டு மணிநேரம் ஓய்வு. மீதி எட்டு மணி நேரம் நம்மை எதிர்நோக்கியுள்ள மாற்றத்திற்கு ஏற்ப தயாராவது அல்லது ஆக்க பூர்வமான செயல்பாடு என வாழ்வை அமைக்க வேண்டும். தமோ குணத்தின் பிடியில் இருந்தால் எப்போது துாங்க வேண்டும், எப்போது வேலை செய்ய வேண்டும் என்ற தெளிவு இருக்காது. ஏனெனில் தமோ குணத்தால் குழப்பமே மிஞ்சும்.

பல நேரங்களில் வேகமாக வேலை செய்வதாக நீங்கள் நம்பலாம். 'இப்போது என்ன அவசரம், பிறகு பார்க்கலாம்' என தமோ குணம் ஒருவரை நம்ப வைக்கும். இப்படித் தான் ஒரு பாழடைந்த பங்களா ஒன்றின் பின்புறம் ஆமை ஒன்று வசித்தது. ஒரு நாள் அது ஏன் நாம் வீட்டைக் கடந்து முன்புறம் சாலைக்குப் போகக் கூடாது என நினைத்தது. மெதுவாக நகர்ந்து பத்து நாளில் வீட்டின் பின்கட்டிற்கு வந்தது. அடுத்து பத்து நாளில் மெல்ல நகர்ந்து சமையல்கட்டை அடைந்தது. அடுத்த மூன்று நாளில் வரவேற்பறைக்கு வந்தது. அடுத்த பத்து நாளில் வீட்டின் முன் வாசலுக்கு வந்த அது இரண்டு நாளில் முன் படிக்கட்டைத் தாண்டி சாலையை அடைந்தது. சற்றே திரும்பிய போது என்ன ஆச்சரியம்! கண்முன்னே வீடு இடிந்து விழுந்தது. 'நல்ல வேளை தப்பித்தோம்! சற்று மெதுவாக வந்திருந்தால் என்னாயிருக்கும்' என அப்போது பெருமையோடு நினைத்தது ஆமை!

இதுவே தமோ குணத்தின் மாயத் தோற்றம்.

பல நேரத்தில் மனதில் ஏற்படும் எதிர்மறை எண்ணம் வாழ்வை அழிக்கிறது. முக்கிய எதிர்மறையான எண்ணங்களை சற்று பார்ப்போம்.

'என்னால் முடியாது' என்ற எண்ணம். 'நான் ஏழையாகப் பிறந்து விட்டேன்' என நினைப்பவர்கள் அரிஸ்டாடல், ஓனாசிஸ் போன்ற பணக்காரர்கள் ஏழ்மையை வென்றதை தெரிந்து கொள்ள வேண்டும். பெட்ரோல் பங்கில் சாதாரண பணியில் இருந்தவர் தான் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் என்பதை மறக்க வேண்டாம்.

நான் செய்வது சரி என்ற எண்ணம் இருந்தால் மற்றவரின் அறிவுரை மனதில் பதியாது. 'வினாச காலே விபரீத புத்தி' என்பர். தமோகுணத்தால் நல்ல வார்த்தைகளை ஏற்க மனம் மறுக்கும்.

ஏன் உழைக்க வேண்டும், இப்படியே இருப்பது எனக்கு சவுகர்யம். அதிர்ஷ்டம் என்னைக் காப்பாற்றும், அதிசயம் நிகழும், நடந்ததும், நடப்பதும், நடக்கப் போவதும் நம் கையில் இல்லை என்ற எண்ணம், விதியை மாற்ற முடியாது என்பது ஓரளவு உண்மையாக இருக்கலாம். ஆனால் விதியை மதி வெல்லும் என நம்ப வேண்டும். ஆனால் தமோ குணம் அப்படி நினைக்க விடாது.

இந்த வாரம் சுய பரிசோதனை ஒன்றைச் செய்யுங்கள். அடுத்த பத்து ஆண்டுகளில் நீங்கள் அடைய நினைக்கும் குறிக்கோள் என்ன, அதை தடுக்கும் தமோ குணங்கள் என்ன, அதில் இருந்து விடுபட என்ன செய்வீர்கள் என குறிப்பு எழுதுங்கள்.

தமோ குணத்திலிருந்து வெளி வருவது பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.

தொடரும்

அலைபேசி: 73396 77870

திருவள்ளூர் என்.சி. ஸ்ரீதரன்






      Dinamalar
      Follow us