ADDED : செப் 22, 2017 10:03 AM

சரஸ்வதிக்கு தனிக்கோயில் திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் உள்ளது.
இத்தலத்தில் சரஸ்வதி கன்னிப்பெண்ணாக அருள்பாலிக்கிறாள்.
தல வரலாறு: சத்தியலோகத்தில் இருந்த பிரம்மாவிடம் சரஸ்வதி, ''உலகமே கல்விக்கரசியான என்னால் தான் பெருமைஅடைகிறது,” என்றாள். பதிலுக்கு, அவளது கணவர் பிரம்மா, “இல்லை...இல்லை...நான் செய்யும் படைப்புத் தொழிலால் தான், இந்த உலகத்துக்கு பெருமை ஏற்படுகிறது,” என்றார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஒருவரையொருவர் சபித்துக் கொண்டனர். அதன் காரணமாக, பூலோகத்தில் இருந்த கூத்தனூரில், புண்ணியகீர்த்தி, சோபனை என்னும் தம்பதிக்கு பகுகாந்தன் என்ற மகனாகவும், சிரத்தை என்ற மகளாகவும் பிறந்தனர். அதாவது, கணவன், மனைவியாக இருந்தவர்கள் அண்ணன், தங்கையாக பிறக்க நேர்ந்தது. அவர்களுக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தனர். அப்போது, அவர்களுக்கு தாங்கள் யார் என்ற உண்மை நினைவுக்கு வந்தது. இருவரும் சிவபெருமானை நோக்கி வேண்டினர். அவர்களிடம் சிவன், “சகோதர உறவில் பிறந்து விட்டதால், சரஸ்வதி இங்கு கன்னியாக வீற்றிருந்து கல்விச் செல்வத்தை வழங்க வேண்டும்,” என்றார். அதன்படி, சரஸ்வதி அங்கு தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.
பெயர்க்காரணம்: இரண்டாம் ராஜராஜ சோழன் ஒட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கிய ஊர் என்பதால், அவரது பெயரால் 'கூத்தனூர்' என அழைக்கப்படுகிறது. இக்கோவிலை ஒட்டக்கூத்தர் கட்டியதாக தலபுராணம் கூறுகிறது. பிரகாரத்தில் விநாயகர், நாகர், பிரம்மா, பிரம்புரீஸ்வரர், பாலதண்டாயுதபாணி வீற்றிருக்கின்றனர்.
ஞான பீடம்: மூலவர் சரஸ்வதி வெள்ளை ஆடையுடன், வெள்ளைத் தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். வலது கீழ் கையில் சின்முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது மேல் கையில் அட்சர மாலையும், இடது மேல்கையில் அமிர்த கலசமும் தாங்கியிருக்கிறாள். ஜடாமுடியும், 'ஞானச்சஸ்' என்ற மூன்றாவது திருக்கண்ணும் கொண்டு கிழக்கு நோக்கி இருக்கிறாள். ஞானம் அருள்பவளாக இருப்பதால் இத்தலத்திற்கு 'ஞான பீடம்' என்னும் சிறப்பு பெயருண்டு. சரஸ்வதி நதியே இத்தலத்தில் 'அரசலாறு' என்ற பெயரில் ஓடுகிறது.
எப்படி செல்வது: திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் 30 கி.மீ., தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் இருந்து பிரியும் ரோட்டில் 6 கி.மீ.,
விசேஷ நாட்கள்: நவராத்திரி சிறப்பு பூஜை, அதன்பின் 10 நாள் ஊஞ்சல் உற்ஸவம். மூல நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜை. தமிழ் புத்தாண்டு முதல் 45 நாட்களுக்கு லட்சார்ச்சனை.
நேரம்: காலை 6:00 - மதியம் 12:00 மணி; மாலை 4:00 - இரவு 9:00 மணி
தொடர்புக்கு: 04366 273 050, 238 445
அருகிலுள்ள தலம்: கூத்தனூரில் இருந்து 21 கி.மீ.,ல் மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோயில்