பெங்களூருவில் இருந்து புட்டபர்த்தி செல்லும் வழியில் 120 கி.மீ., துாரத்தில் உள்ள நகரம் 'லேபட்சி'. ஆந்திராவில் உள்ள அனந்தப்பூர் மாவட்டம் ஹிந்தாபூரிலிருந்து 15 கி.மீ., பயணித்தால் இந்நகரை அடையலாம். ராமாயண வரலாற்றுடன் தொடர்புடைய தலம் இது.
சீதையை கடத்திய ராவணனை, பறவையான ஜடாயு தடுக்க முயன்றது. அதன் சிறகுகளை வெட்டித் தள்ளினான் ராவணன். தகவலை ராமனிடம் சொல்வதற்காக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கிடந்தது ஜடாயு. அதன் பரிதாப நிலையைக் கண்ட ராமர், 'எழுந்திரு பறவையே' என்னும் பொருளில் 'லே பட்சி' என அழைத்தார். அதுவே இந்த ஊரின் பெயராகி விட்டது.
இப்பகுதியை ஆண்ட விஜயநகர மன்னர்கள் வீரபத்திரசுவாமி கோயில் ஒன்றை இங்கு கட்டினர். இங்குள்ள மண்டபத்தில் 100 இதழ்கள் கொண்ட தாமரை, ரம்பா, ஊர்வசி, திலோத்தமா, ராமாயண சம்பவங்கள் ஓவியமாக தீட்டப்பட்டுள்ளன. இங்கு விற்கப்படும் சேலைகளில் இந்த ஓவியங்கள் பார்டர் டிசைனாக பயன்படுத்தப்படுகிறது.