ADDED : செப் 29, 2025 10:34 AM

கல்வி கற்றவனே கண்கள் கொண்டவன். கற்காவிட்டால் கண்ணிருந்தும் பயனில்லை. கல்வியின் பெருமை பற்றி திருவள்ளுவர், ''கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை'' என்கிறார். மகாபாரதத்தில் யட்சனாக வரும் எமதர்மன் தன் மகனைச் சோதிப்பதற்காக, ''விலை மதிப்பற்ற சொத்து எது?'' எனக் கேட்கிறான்.
அதற்கு தர்மர், ''கல்வியே விலை மதிப்பற்ற சொத்து'' என பதிலளித்தார். இப்படி பெருமை மிக்க கல்வியின் தெய்வமான சரஸ்வதியை பூஜிக்கும் நாளே சரஸ்வதி பூஜை.
கல்வி கேள்வி, கலை, கலாசாரம், விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் என அனைத்திற்கும் தெய்வம் சரஸ்வதி. வேதங்களில் முதன்மையான ரிக் வேதம் சரஸ்வதியை போற்றுகிறது.
வாக்தேவி, ஜ்யோதிஸ்வரூபா, வாஜினீவதி, ருதாவரி என்றும் அழைக்கப்படும் அவள் வெண்பட்டு உடுத்தி வெண்தாமரை மீதும், வெள்ளை அன்னத்தின் மீதும் அமர்ந்து அருள்புரிகிறாள். புத்தகங்கள், படிப்பிற்குத் தேவையான சாதனங்களை சரஸ்வதி பூஜையன்று வழிபட ஞானம், கல்வியறிவை வழங்குவாள்.