முருகா... என அழைத்தாலே போதும். மும்மூர்த்திகளும் ஓடி வந்து விடுவர்.
'மு' என்றால் முகுந்தன்(பெருமாள்), ரு என்றால் ருத்ரன்(சிவன்), க என்றால் கமலன்(பிரம்மா) என மூவரது பெயரும் இதில் அடங்கியுள்ளது. 'முருகா' என்ற பெயருக்கு தெய்வத்தன்மை, அழகு, இளமை, மகிழ்ச்சி, மணம், இனிமை என்னும் ஆறு பொருள் உண்டு. முருகன், குமரன், குகன், ஆகிய மூன்று பெயர்களும் சிறப்பானவை.
இதை அருணகிரிநாதர், ''முருகன், குமரன், குகன், என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய்'' என்று கந்தரனுபூதி பாடலில் குறிப்பிட்டுள்ளார். சஷ்டி விரதம் இருப்பவர்கள் மந்திரம், ஸ்லோகம் சொல்ல முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. 'முருகா' என்ற நாமத்தை இடைவிடாமல் ஜபித்தால் போதும். அவரது அருள் கிடைத்து விடும். இவர் குழந்தையாக இருந்தாலும் பெரியவர்களை போல் மன்னிக்கும் மனம் கொண்டவர்.
ராவணன், கம்சன் போன்ற அசுரர்கள் ராமன், கிருஷ்ணரால் வதம் செய்யப்பட்டார்கள். ஆனால் அசுரனை சூரபத்மனை வதம் செய்யவில்லை. அவனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றி வாகனம், கொடியாக ஏற்ற கருணை தெய்வம் அவர்.

