
கலியுகத்தில் கண் கண்ட தெய்வம் முருகப்பெருமான். அவரின் பெருமையை பறைசாற்றும் நுால்களில் கந்தசஷ்டி கவசம் சிறப்பானது.
கந்தன் என்பதற்கு 'ஒன்றுபட்டவன்' என்பர். இவர் பகைவரின் பராக்கிரமத்தை வற்றச் செய்பவர். நம் உடல், உள்ளம், உயிருக்கு காவலாக இருப்பவர். கந்தனின் அழகு, பெருமை, நம்மை அவர் காக்க வேண்டும் என்ற வேண்டுதல் என வரிசையாகச் சொல்லும் விதத்தில் அமைந்தது கந்தசஷ்டி கவசம்.
பாலன் தேவராய சுவாமிகள் நோய் தீர்ப்பதற்காக பாடிய கவசம் இது. ஆறுபடை வீடுகளுக்கும் தனி கவசங்கள் இவர் பாடினாலும் திருச்செந்துார் கவசமே புகழ் மிக்கது. எளிய தமிழில் இருக்கும் இதை எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம். இதனால் மன, உடல் நோய் நீங்கும்.
பேசும் வார்த்தைகளுக்கு சக்தி உண்டு. அவை மந்திரங்களாக இருக்கும் போது இன்னும் சக்தி அதிகமாகும். உதாரணமாக ஒருவரிடம், 'நீங்கள் செய்யும் செயல் வெற்றி பெறும். வாழ்வில் உயர்வு பெறுவீர்கள்'' என நேர்மறையாக சொன்னால் அந்த வார்த்தையால் அவருடைய உடல், மனம் உற்சாகம் பெறும். நம்பிக்கை அதிகரிக்கும். நோயாளியிடம் இதையே கடைபிடிக்கிறார் மருத்துவர். 'மருந்தை நம்பிக்கையுடன் சாப்பிடுங்கள்' என்னும் வார்த்தையில் ஐம்பது சதம் மருந்து மறைந்துள்ளது.
நம்பிக்கை தரும் இந்த விஷயத்தை அருளாக்கி தருகிறது ஆன்மிகம். முருகன் அருளால் நோய் பறந்தோடும் என உணர்ந்து படிக்கும் போதே பாதி நோய் மறையும்.
கடவுள் நம்பிக்கையுடன் படிப்பவர்களுக்கு கவசம் துணை நிற்கும். இதுவும் மனோதத்துவ சிகிச்சையே. 'நோயை எதிர்த்து என்னால் வாழ முடியும்' என்ற நம்பிக்கையுடன் நோயை வென்றவர்கள் பலர் இருக்கின்றனர். புற்றுநோயாளி பலர் மருத்துவம் தந்த காலக்கெடு முடிந்த பின்னும் வாழ்நாள் தொடர்வதற்கு காரணம் அவர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை எல்லா இடங்களிலும், காலங்களிலும், செயல்களிலும் இருக்க வேண்டும். 'கணவர் அல்லது மனைவி என்னைச் சார்ந்து வாழ்கிறார்' என்ற நம்பிக்கை இல்லாவிட்டால் குடும்பம் எப்படி கேள்விக்குறியாகுமோ அதுபோலத்தான் இதுவும். முருகன் என்னைக் காப்பாற்றுகிறார் என்ற நம்பிக்கையில் பிறந்த பாடல் வரிகள் இவை.
''காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியினில் நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட''
என நம்பிக்கையுடன் தினமும் பாடுங்கள். நோய் தவிடு பொடியாகும். மனம், உடம்பில் உற்சாகம் பரவச் செய்யும் மந்திரச் சொற்கள் இவை. படித்தாலும், கேட்டாலும் பலன் தரும் கந்தசஷ்டி கவசத்தை தினமும் பாடுவோம்.

