
முருகன் எப்படி அவதரித்தார் என்பது பற்றி காஞ்சி மஹாபெரியவர் சொல்வதைக் கேளுங்கள்.
பிரம்மாவின் புத்திரர் சனத்குமாரர். இவர் எல்லாப் பொருட்களையும் தெய்வமாக கருதுவார். ஈ, எறும்பு முதல் வானுலக தேவர்கள் வரை அனைவரும் தெய்வம் தான், இவர் ஒருமுறை அசுரர்களுடன் போர் புரிந்து வெல்வது போல கனவு கண்டார். இது பற்றி தந்தை பிரம்மாவிடம் விளக்கம் கேட்டார்.
“முற்பிறவியில் அசுரர்களின் அட்டகாசத்தைக் கண்ட நீ அவர்களை ஒழிக்க முடிவெடுத்தாய். அந்த நினைவே இப்போது கனவாக வெளிப்பட்டது. இப்பிறவியில் அசுரர்களையும் நீ தெய்வமாகப் பார்ப்பதால் போர் நடக்காது. அடுத்த பிறவியில் இக்கனவு பலிக்கும்'' என்றார். இப்படிப்பட்ட ஞானியான சனத்குமாரருக்கு காட்சியளித்த சிவனும், பார்வதியும் அவர் விரும்பும் வரத்தை தருவதாக தெரிவித்தனர்.
''வரம் பெற்று பிழைக்கும் தேவை எனக்கில்லை. வேண்டுமானால் நான் வரம் தருகிறேன்,” என்றார்.
ஆசை துளியும் இல்லாத சனத்குமாரரைக் கண்டு மகிழ்ந்த சிவன் “அப்படியானால்... ஞானியான நீ எனக்கு குழந்தையாகப் பிறக்க வேண்டும்” என்றார்.
'சரி..'என்று ஒப்புக்கொண்ட சனத்குமாரர் அதிலும் ஒரு புள்ளி வைத்தார். “சிவனே! நீர் மட்டும் தான் என்னை பிள்ளையாகப் பிறக்கக் கேட்டீர். எனவே தாயின் சம்பந்தம் இல்லாமல் பிறக்க விரும்புகிறேன்” என்றார். சிவனும் சம்மதித்தார். இதையறிந்த பார்வதி, ''தாய் வயிற்றில் குழந்தை பிறப்பதல்லவோ நியாயம்! தந்தை மூலம் மட்டும் பிறப்பேன் என்கிறாயே! அப்படியானால் உன்னைப் போன்ற நல்ல பிள்ளையைப் பெறும் பாக்கியத்தை இழப்பேனே” என வருந்தினாள்.
அதற்கு சிவன், “கவலை வேண்டாம்! பஸ்மாசுரன் என்பவன் யார் மீது கை வைத்தாலும் அவர்கள் சாம்பலாக வேண்டும் என வரம் பெற்றான். அதைச் சோதிக்க என் தலையிலேயே கை வைக்க முயற்சிக்கவே, நான் மறைந்தேன். என்னைக் காணாத சோகத்தில் தண்ணீராக உருகிய நீ பொய்கையாக மாறினாய். இப்போதும் அது சரவணப்பொய்கை என்ற பெயரில் இருக்கிறது.
நெற்றிக்கண் மூலம் நான் சனத்குமாரனை தீப்பொறிகளாக உண்டாக்குவேன். அத்தீயை தாங்கும் சக்தி அந்த பொய்கைக்கு மட்டுமே உண்டு. சரவணப்பொய்கையில் தாங்கும் போது உன் சம்பந்தமும் பிள்ளைக்கு வந்து விடும்” என்றார். அதன்படியே சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து முருகன் அவதரிக்க சரவணப் பொய்கையாக தாங்கினாள் பார்வதி.

