பிற உயிர்களின் தன்மையைக் கண்டு மனம் இரங்குவதே வழிபாடு என்றவர் ராமலிங்க சுவாமிகள். இவரை எல்லோரும் வள்ளலார் என்கிறோம். ஏன் தெரியுமா... வள்ளல் என்றால் பிறருக்கு பொருட்களை வாரி கொடுப்பவர் என்றுதான் நினைத்திருப்போம். ஆனால் இவர் கொடுத்ததோ அறிவுரை என்னும் ரத்தினங்கள். அதாவது ஓர் உயிரானது எப்படி கடவுளை அடைவது என்னும் கோட்பாட்டை தந்தவர்.
உலகில் தாவரம் முதல் மனிதர் வரை அனைத்துமே உயிர்கள் என்பது ஹிந்து மதம் சொல்லும் ஞானக்கருத்து. இதையே மாணிக்கவாசகர்,
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்
என உயிர்களின் நிலைகளை பட்டியலிடுகிறார்.
அப்படிப்பட்ட புல், பயிர் வாடியதைக் கண்டு வாடினார் வள்ளலார். உயிர்களுக்கு எந்த தீங்கும் செய்யாமல் வாழுங்கள். மோட்சத்தை பெறுங்கள் என்று வழிகாட்டிய
மகானின் வழி நடப்போம். நல்வாழ்வு பெறுவோம்.