ADDED : ஆக 12, 2011 03:30 PM
மும்மூர்த்திகளின் வடிவமாகக் கருதப்படும் அரசமரத்தை காலையில் வலம் வந்தால் சகல நலன்களும் பெறலாம். கீதையில் கண்ணன், மரங்களில் நான் அரசு என்கிறார். திருவாவடுதுறை (நாகப்பட்டினம் மாவட்டம்) உள்ளிட்ட சிவத்தலங்களிலும், திருப்புல்லாணி (ராமநாதபுரம் மாவட்டம்) போன்ற திருமால் தலங்களிலும் தல விருட்சமாக விளங்குகிறது. அரசமரத்துக்கு வடமொழியில் 'அஸ்வத்த விருட்சம்' என்று பெயர். அரசமரத்தை வழிபடுவோரின் பாவம் உடனுக்குடன் அழிந்து விடும். அரசமர நிழல், 'போதம்' என்ற தத்துவ ஞானத்தைத் தரும். அரசமரத்தடியில்தான் சித்தார்த்தர், புத்தர் ஆனார். மரமும் போதி மரம் ஆயிற்று. அரசமர நிழல் படும் நீர்நிலைகளில் வியாழன் மற்றும் அமாவாசை நாட்களில் நீராடுவது பிரயாகை - திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்கு சமம். திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் உலகம்மன் சந்நிதி படித்துறையில் அரசமர நிழல் தாமிரபரணி ஆற்றிற்குள் விழுகிறது.
திங்கள்கிழமை அமாவாசை வந்தால் 'அமா சோமவார விரதம்' என்பர். அன்று அரசமரத்தை வலம் வருவது மிகவும் புண்ணியம். வைகாசி மாதம் அரசமரத்தடியில் நாகர் சிலை பிரதிஷ்டை செய்வது சிறப்பு. தென்காசி அருகிலுள்ள ஆய்க்குடி பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் அரச இலைகளில் விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. அரசமரத்தின் கீழ் அமர்ந்து யோகா செய்வோர் விரைவில் மன ஒருமைப்பாட்டை பெறுவர்.