
நவராத்திரி பூஜைக்கு வீட்டுக்கு வருபவர்களுக்கு ஏதாவது டிபன் தர வேண்டாமா! இங்கே கல்கண்டு பொங்கல், தேங்காய் சாதம், அரிசி சுண்டல் ஆகியவற்றை தயாரிக்கும் விதம் தரப்பட்டுள்ளது.
கல்கண்டு பொங்கல்
தேவையான பொருட்கள்
அரிசி - 1 கப்
பால் - 2 கப்
கல்கண்டு - 1 கப்
நெய் - கால் கப்
தண்ணீர் - 2 அரை கப்
முந்திரிபருப்பு - தேவையான அளவு
திராட்சை - தேவையான அளவு
ஏலக்காய் - தேவையான அளவு
செய்முறை: அரிசியை நன்றாகத் தண்ணீரில் கழுவி எடுக்கவும். பால், தண்ணீருடன் அரிசியைச் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். வாணலியில் கல்கண்டை தனியாக தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். கல்கண்டு கரைசலை வடிகட்டி
மீண்டும் கொதிக்க விடவும். வேக வைத்த அரிசியை கொதிக்கும் கல்கண்டு கரைசலில் நன்றாக கலக்கவும். அதில் நெய்யைச் சேர்க்கவும். வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி பருப்பு, திராட்சையை வறுத்து பொங்கலில் சேர்க்கவும். ஏலக்காயைப் பொடி செய்து அதன் மீது தூவவும். அம்பிகையின் நைவேத்யத்திற்கு சூடான கல்கண்டு பொங்கல் ரெடி.
தேங்காய் சாதம்
தேவையான பொருட்கள்
அரிசி - 1 கப்
தேங்காய்த் துருவல் - 1 கப்
பச்சை மிளகாய் - 4
தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்
செய்முறை: அரிசியை வேக வைத்துக் கொள்ளவும். பிறகு அதை ஒரு தட்டில் ஆற வைக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, பச்சை மிளகாய், கறி வேப்பிலை இவற்றைத் தாளித்து தேங்காய்த் துருவலை அதில் சேர்த்து வதக்கி ஆற வைத்துள்ள சாதத்தில் போடவும். உப்பு சேர்த்துக் கிளறவும். ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கிளறவும். கொத்துமல்லி தழையைப் போட்டு இறக்கி வைக்கவும்.
அரிசி சுண்டல்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 25 கிராம்
மிளகாய் வற்றல் - 3
கடுகு - அரை ஸ்பூன்
பெருங்காயத்தூள்- அரை ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 ஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையானஅளவு
தேங்காய் துருவல் - தேவையானஅளவு
செய்முறை: பச்சரிசியை சுத்தம் செய்து வாணலியில் இட்டு நன்றாக வறுத்து தனியாக வைக்கவும். பிறகு பாசிப்
பருப்பை வாணலியில் இட்டு லேசாக சூடு செய்து தனியாக வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் கடுகு, உளுந்தம்பருப்பு, மிளகாய் வற்றல் சேர்த்து தாளித்து பின்னர், அதில் தேவைக்கு தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். கொதிக்கும் போது வறுத்த அரிசி, பாசிப்பருப்பு, தேங்காயத்துருவல் போட்டு வேக வைக்கவும். குறைவான தீயில் நன்றாக வெந்ததும் பெருங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும். இப்போது சுவையான அரிசி சுண்டல் தயாராகி விடும்.

