ADDED : ஜூலை 29, 2014 04:19 PM

ஜூலை 30 ஆடிப்பூரம்
ஸ்ரீரங்கத்தில் வைஷ்ணவி என்ற மாரியம்மனின் உக்கிரம் அதிகமாக இருந்தது. அதனால், கோயில் நிர்வாகத்தினர் கண்ணனூர் என்னுமிடத்தில் அந்த விக்ரஹத்தை வைத்து விட்டனர். வைஷ்ணவியை மாரியம்மனாக அப்பகுதி மக்கள் வழிபட்டனர். விஜயநகரப்படைகள் தென் பகுதியை முற்றுகையிட்ட போது போரில் வெற்றி பெற்றால் அவ்விடத்தில் அம்மனுக்கு ஆலயம் எழுப்புவதாக விஜயநகர மன்னர் வேண்டிக் கொண்டார். அதன்படியே தென்பகுதியை வெற்றி கொண்டார். பிரார்த்தனையை நிறைவேற்ற கண்ணனூரில் விஜயநகர மன்னர் கட்டிய கோயிலே சமயபுரம் மாரியம்மன் கோயிலானது.
மாரி என்றால் மழை. மழை பெய்தால் நாடு செழிக்கும். அதுபோல் நம் வாழ்வு செழிக்க அருள்மழை பொழிபவள் சமயபுரம் மாரியம்மன். இந்தக் கோயிலே தமிழகத்தின் தலைசிறந்த மாரியம்மன் கோயிலாகத் திகழ்கிறது. தலைக்குமேல் ஐந்து தலை நாகம் குடையாக இருக்க, தன் கரங்களில் கத்தி, உடுக்கை, தாமரை, திரிசூலம், கபாலம், மணி, வில், பாசம் ஆகியவற்றைத் தாங்கி, இடது காலை மடக்கிய நிலையில் அமர்ந்த நிலையில் வீற்றிருக்கிறாள். மற்ற அம்மன் தலங்களில் அம்பிகைக்கு நான்கு கரங்கள் மட்டும்தான் இருக்கும்.
ஆனால், இங்கு அம்பிகை எட்டு கரங்களுடன் காட்சி தருகிறாள். தக்க சமயத்தில் தன் அடியவர்களைக் காப்பதால் இவள் சமயபுரத்தாள் என்று பெயர் பெற்றாள். எல்லாரும் அம்பாளுக்காக விரதம் இருப்பார்கள். ஆனால், சமயபுரத்தாளோ உலகமக்கள் நலம் பெற வேண்டி, அவளே விரதம் இருப்பது சிறப்பு. அம்பாள் ருதுவான நாள் ஆடிப்பூரம் என்பர். இந்நாளில் சமயபுரம் மாரியம்மனைத் தரிசிப்பது மிகவும் சிறப்பு.