/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
காஞ்சி பெரியவர்
/
கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?
/
கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?
ADDED : டிச 13, 2007 06:00 PM

தேகம், மனம், சாஸ்திரம், ÷க்ஷத்திரம், தீர்த்தம் முதலிய பல சவுகரியங்கள் இந்த உலகத்தில் தான் நமக்குக் கிடைக்கும். நாம் வாக்கினாலும், மனத்தினாலும், கை, கால் முதலியவற்றாலும் பாவம் செய்துகொண்டே இருக்கிறோம். அந்தப் பாவங்களையெல்லாம், வாக்கு, மனசு, அவயவங்களைக் கொண்டே புண்ணியம் செய்து கரைத்திட வேண்டும்.
எல்லோரும் அவரவர் தர்மத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் பயன்படுபவைதாம் ஆசாரங்கள். நமக்கு அர்த்தம் தெரியவில்லை என்பதற்காக அவற்றை விட்டுவிடக் கூடாது.
நம் துக்கங்களை எல்லாம் ஞானமாகிய தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போது ஜலத்துக்குள் மூழ்கிய குடம் மாதிரி துக்கம் பரம லேசாகிவிடும்.
'ஏழு அஞ்சில்' என்று ஒரு மரம் உண்டாம். அதன் காய் முற்றியவுடன் பூமியில் விழுந்து உடையும். உடனே உள்ளே இருக்கிற விதைகள் ஏதோ ஒரு ஆகர்ஷண சக்தியால் நகர்ந்து நகர்ந்து வந்து, மறுபடியும் தாய் மரத்தோடேயே ஒட்டிக் கொள்ளும். ஒட்டிக்கொண்டபின் மூலமான மரத்துக்குள்ளேயே மறைந்து விடும் என்கிறார்கள். பகவானிடம் இருந்து பிரிந்து வந்திருக்கிற நாமும், இப்படியே அவன் பக்கமாக நகர்ந்துபோய் முடிவில் அவனிடம் ஒட்டிக்கொண்டு ஒன்றாகிவிட வேண்டும்.
நாம் பக்தி பண்ணுகிறோம். ஆனால் எப்படி? கஷ்டம் வந்தால் மட்டும் அது நிவர்த்தியாகப் பெரிய பூஜை, சாந்தி எல்லாம் செய்கிறோம். நிவிர்த்தியானால் அநேகமாகப் பூஜையையும் அதோடு விட்டுவிடுவோம். ஆகாவிட்டாலோ சுவாமியை திட்டுவோம். எனவே, நமக்கு உண்மையான ஞானமும் பக்தியும் வர வேண்டும்