/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
கிருபானந்த வாரியார்
/
நன்றி மறப்பது நன்றன்று
/
நன்றி மறப்பது நன்றன்று
ADDED : டிச 11, 2007 09:18 PM

இறைவனை ஏன் வணங்க வேண்டும்? இறைவனை வணங்காவிடில் கடவுளுக்கு என்ன நஷ்டம்? மனித வாழ்வில் இறையுணர்ச்சி இல்லாமல் வாழ முடியாதா? என்ற கேள்விகளை நாத்திகப் பெருமக்கள் கேட்கிறார்கள்.
விலங்குகளும் உண்கின்றன. உறங்குகின்றன; உலாவுகின்றன; இனம் பெருக்குகின்றன; மனிதர்களாகிய நாமும் உண்கிறோம். உறங்குகிறோம். உலாவுகிறோம்; இனம்பெருக்குகிறோம். இவை விலங்குகட்கும், மனிதர்கட்கும் ஒன்றாகவே அமைந்திருக்கின்றன. விலங்குகளினின்றும் மனிதன் உயர்ந்து விளங்குவது தெய்வ உணர்ச்சி ஒன்றினாலேயாகும்.
ஓமனிதன் செய்கின்ற பாவங்களுக்கெல்லாம் கழுவாய் உண்டு; ஆனால், நன்றி கொன்ற பாவத்திற்கு மட்டும் கழுவாய் இல்லை. எனவே, கழுவாய் இல்லாத பாவம் ஒன்று உண்டேல், அது 'நன்றி மறத்தல்' என்ற பாவம் ஒன்றேயாகும். இதற்கு நேர் மறுதலையாக அமைந்த சிறந்த புண்ணியம் நன்றி மறவாமையாகும்.
ஓ இந்த உடம்பையும், உடம்பின் உறுப்புக்களையும் உள்ளுறை கருவி காரணங்களையும் தந்தவன் இறைவன். அந்த இறைவன் ஏன் தந்தான்? எதற்காகத் தந்தான்? எதன் பொருட்டுத் தந்தான்? தந்ததற்கான காரணம் என்ன? அப்படித்தந்த இறைவன் எங்குள்ளான்? அவனைக் கண்டவர் யார்? அவனைக் காண வழி யாது? என்பனவற்றை நாளும் சிந்தனை செய்ய வேண்டும். அவ்வாறு சிந்தனை செய்தவர்கள் தான், அடியார்களும் அருளாளர்களும், பக்திமான்களுமாவார். அவர்கள் வழியில் உடம்பெடுத்த நாமும் இதுபற்றி சிந்தனை செய்ய வேண்டும்.