
நன்றாக படிக்கும் மாணவன் ஜமால். பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதால் மேல்படிப்புக்கு வெளிநாட்டுக்கு செல்ல விரும்பினான். ஆனால் பொருளாதார நிலை ஒத்துழைக்கவில்லை. அவனது அப்பா சாதிக் தெரிந்த இடத்தில் எல்லாம் கடன் கேட்டும் பலனில்லை.
ஒருநாள் அலைந்து திரிந்து விட்டு சாதிக் சோர்வுடன் வீட்டுக்கு வந்தார். அதைப் பார்த்த மனைவி கதிஜா குடிக்க மோர் கொடுத்து விட்டு, ''என்னங்க...ஜமாலுக்காக நீங்க அலையுறதை பார்த்தா கஷ்டமாக இருக்கு. எல்லாம் அவன் விருப்பப்படி நடக்கும். அவன் விரும்பினால் மேல்படிப்புக்குச் செல்வான். 'இன்ஷா அல்லாஹ்' என்றாள்.
சற்று நேரத்தில் ஜமாலின் பள்ளித்தோழன் ரஹ்மானின் அப்பா அன்வர் வந்தார். சாதிக்கிடம், ''என் மகன் நன்றாக படிப்பான். இருந்தாலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை. இங்கேயே ஆர்ட்ஸ் காலேஜில் சேர்வதாக சொல்லி விட்டான். உங்களின் மகனின் மேல்படிப்புக்காக கடன் கேட்டு அலைவதாகவும் சொன்னான். என் மகனுக்காக சேர்த்த பணத்தை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள். முடிந்த போது கொடுங்கள்'' எனக் காசோலையை நீட்டினார். வாயடைத்துப் போனார் சாதிக்.
பார்த்தீர்களா... எல்லாம் அவன் விருப்பம் தான்.