ஆது என்னும் சமுதாயத்தினர் வாழ்ந்த பகுதிகளில் பஞ்சம் நிலவியது. இதை சீர்படுத்த மெக்காவில் உள்ள கஅபதுல்லாஹ்வில் பிரார்த்தனை செய்ய 70 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். அந்தக் காலத்தில் பஞ்சம் ஏற்பட்டால் பிரார்த்தனைக் குழுவினர் மெக்காவிற்கு வருவது வழக்கம்.
அவர்களின் கோரிக்கையை இறைவனும் உடனடியாக நிறைவேற்றுவான். கஅபதுல்லாஹ் இன்றுள்ளது போல கட்டடமாக அப்போது இல்லை. செம்மண் திட்டாக இருந்தது. அதில் 'ஹஜ்ரே அஸ்வத்' என்ற சுவர்க்கத்துக் கல் பதிக்கப்பட்டிருந்தது. இந்த நடைமுறையைத் தான் ஆது சமுதாயத்தினர் பின்பற்றினர்.
அப்போது மெக்கா நகரில் 'அமாலிகா' என்ற சமுதாயத்தினர் வாழ்ந்தனர். அவர்களின் தலைவரான முஆவியா இப்னு பக்கர் வந்தவர்களுக்கு மது, மாமிசம் வழங்கி உபசரித்தார். விருந்து களியாட்டத்தில் குழுவினர் கடமையைச் செய்ய மறந்தனர். கடமையை மறந்தால் இறைவனும் உதவ மாட்டான் என்பதற்கு இது உதாரணம்.