ADDED : மே 15, 2025 08:21 AM
மத்யன் நகரின் ஆளுநராக இருந்தவர் சல்மான் பார்சி. எல்லோரும் அணுகும் விதத்தில் எளிமையானவர் அவர்.
பணியாளர்கள் உதவிக்கு இருந்தாலும் தனக்கு தேவையானதை தானே கடைக்குச் சென்று வாங்குவார். அப்படி ஒருமுறை கடைத்தெருவுக்கு அவர் சென்ற போது, 'கூலியாள் யாராவது வருகிறார்களா' என மூடையுடன் காத்துக் கொண்டிருந்தார் ஒரு நபர். சல்மானின் எளிமையான தோற்றத்தை பார்த்து, 'இந்த மூடையைச் சுமந்து கொண்டு வா' என்றார். மறுப்பு சொல்லாமல் துாக்கிக் கொண்டு நடந்தார். குறிப்பிட்ட இடத்தில் மூடையை இறக்கி வைத்து புறப்பட்டார்.
உடனே அந்த நபர், ''ஏம்பா... கூலி வாங்காமல் கிளம்புகிறாயே'' எனக் கேட்டார். ''வேண்டாம். மக்களுக்கு சேவை செய்வதற்காக இந்த நாட்டின் கலீபா என்னை ஆளுநராக நியமித்துள்ளார். அதற்காக வாங்கும் சம்பளம் எனக்கு போதும்'' என்றார். இப்படியும் ஒரு ஆட்சியாளரா என ஆச்சரியப்பட்டார் அந்த நபர்.