ADDED : செப் 12, 2025 07:57 AM
முகவ்கிஸ் எனும் எகிப்து நாட்டு மன்னர், நபிகள் நாயகத்திற்கு பல பரிசுகளை அனுப்பினார். அதில் மருத்துவர் ஒருவரும் இருந்தார். அந்த மருத்துவர் மெதீனாவிற்கு வந்து சில மாதங்கள் ஆகியும் அவரிடம் ஒருவரும் சிகிச்சைக்கு வரவில்லை. இதனால் அவர், 'நான் வேறு நாட்டை சேர்ந்தவன் என்பதால், யாரும் சிகிச்சைக்கு வரவில்லை' என வருந்தினார்.
ஒருநாள் மருத்துவரை சந்தித்த நாயகம், ''இறைவனின் அருளால் உங்களின் உதவி எங்களுக்குத் தேவையில்லை. உங்கள் நாட்டிற்கு செல்லுங்கள்'' என்றார்.
இதைக் கேட்ட மருத்துவர், ஏன் என ஆச்சர்யமாக கேட்டார்.
''குர்ஆனின் போதனைப்படி பசித்த பின்னரே நாங்கள் சாப்பிடுவோம். அதுவும் குறைந்த அளவே சாப்பிடுவோம். எனவே நோய் வருவதில்லை'' என பதிலளித்தார்.
அவரும் மகிழ்ச்சியுடன் ''சரி... புறப்படுகிறேன்'' என்றார்.
பார்த்தீர்களா... பசித்தபின் சாப்பிட்டால் நன்றாக வாழலாம் என்பதை உணருங்கள்.
