முஸ்தபாவும், சாதிக்கும் நண்பர்கள். பிறருக்கு அட்வைஸ் சொல்வது தான் முஸ்தபாவின் வேலையாக இருந்தது. ஆனால் அதை அவன் பின்பற்ற மாட்டான். இதற்கு முடிவு கட்ட சாதிக் தீர்மானித்தான். இந்நிலையில் ஒருநாள், ''நண்பா... எங்க வீட்டு ஓனர் என்னை பாடாய்ப்படுத்துகிறார். வீட்டை சுத்தமாக வைக்கலைன்னு திட்டுறார். அவரிடம் நீ வந்து பேசேன்'' என்றான் முஸ்தபா.
''அவர் சொல்வதில் என்ன தப்பு'' என்றான் சாதிக்.
''இப்படி அவர் சொல்றாரே. அவர் வீட்டை போய் பாரு. அழுக்கை தவிர வேறு எதாவது இருக்கான்னு பார்த்துச் சொல்லு'' என்றான் முஸ்தபா.
''ஊருக்குத் தான் உபதேசமா... இப்படி செய்தால் தீர்ப்பு நாளன்று தண்டனை கிடைக்கும். அது தெரியாதா அவருக்கு'' என்றான் சாதிக்.
''அப்படி அதில் என்ன தண்டனை கிடைக்கும்''
''தீர்ப்பு நாளில் நரக நெருப்பில் துாக்கி எறியப்படுவான். செக்கில் சுற்றுவதைப் போல நரகத்தைச் சுற்றுவான்'' என்றான் சாதிக். முஸ்தபாவின் மனதிற்குள் அலாரம் அடித்தது. அப்போதே திருந்த முடிவு செய்தான்.