
பணப் பற்றாக்குறைக்கு இடையே மகனை சிரமத்துடன் படிக்க வைத்தார் விவசாயி அமீர். அவனும் நன்றாகப் படித்து அரசுப் பணியில் அமர்ந்தான். ஒரு மாதம் கழிந்தது. தோட்டத்தில் விளைந்த பழங்கள், வீட்டில் செய்த பலகாரங்களுடன் அவனைப் பார்க்க கிராமத்தில் இருந்து புறப்பட்டார்.
அலுவலகத்தில் அதிகாரிகளுடன் மகன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தார். அமீரின் மனம் குளிர்ந்தது.
அந்நேரத்தில் அங்கு வந்த ஒரு பணியாளர், ''ஏய்யா... இங்க நிக்குறீங்க. போய் உட்காருங்க. சார் வந்ததும் சொல்றேன்'' என்றார்.
''இல்லய்யா... உள்ளே...'' என அமீர் சொல்லி முடிக்கவில்லை.
அதற்குள் பணியாளர், '' ஒரு தடவை சொன்னா கேட்கமாட்டியா. போய் அங்க உட்காருய்யா'' எனக் கத்தினார். அதைக் கேட்டு வெளியே வந்த மகன், ''ஹலோ மிஸ்டர். பெரியவங்க கிட்ட இப்படியா பேசுவீங்க. முதல்ல வயசுக்கு மரியாதை கொடுங்க. அவர் என் அப்பா'' என்றான்.
தவறை உணர்ந்த பணியாளர் மன்னிப்பு கேட்டார். அப்பாவை அழைத்துச் சென்றான் மகன்.