ADDED : நவ 06, 2025 02:37 PM
முல்லாவிற்கு ஒரு வீட்டின் கீழ்ப்பகுதியை தானம் கொடுத்தார் மன்னர். அவரும் அதில் மகிழ்ச்சியாக வாழ்ந்தார். ஒருநாள் படைவீரன் ஒருவனுக்கு அந்த வீட்டின் மேல்பகுதியை தானம் அளித்தார். நம் இரண்டு குடும்பத்தினரும் ஒருவருக்கு ஒருவர் உதவியாக வாழலாம் என மகிழ்ந்தார் முல்லா.
ஒருநாள் படைவீரனின் மனைவி கல் உரலில் மாவு இடித்தாள். அப்போது சத்தம் இடி போல கேட்டது. அதிர்ச்சி அடைந்த முல்லா, 'இது நியாயமா' எனக் கேட்டார்.
அதற்கு படைவீரன் ஆணவமாக, ''என் மனைவி எப்படி வேண்டுமானாலும் வேலை செய்வாள். அதைக் கேட்க நீ யார்?'' எனக் கத்தினார்.
'' நீ சொல்வது உண்மைதான்'' என சொல்லிய முல்லா, வீட்டுக்கு வந்ததும் தன் வீட்டுச் சுவரை இடிக்க தொடங்கினார். கீழே வந்த படைவீரன், ''என்ன செய்கிறீர்கள்'' எனக் கத்தினார்.
''வீட்டை இடித்து விட்டு புதிதாக கட்டப்போகிறேன்'' என்றார்.
''நீங்கள் என்ன முட்டாளா... கீழ்வீட்டை இடித்தால் மேல்வீடும் என்னாகும் என யோசித்தீரா?''
''மேல்வீட்டைப் பற்றிய கவலை எனக்கு இல்லை. இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. ஏனென்றால் மன்னர் அன்பளிப்பாக கொடுத்த வீடு'' என சொல்லி சிரித்தார் முல்லா.
''மன்னித்து விடுங்கள். தெரியாமல் பேசிவிட்டேன். அதற்காக இப்படியா செய்வது'' என்றார் படைவீரன்.
''அண்டைவீட்டாருக்கு ஒருபோதும் துன்பம் தரக்கூடாது என்பதை உணர்த்தவே இப்படி செய்தேன். இனி இது போன்ற விஷயத்தில் ஈடுபடாதீர்கள்'' என எச்சரித்தார் முல்லா.

