
நிரபராதியான இளைஞன் ஒருவனை, கவர்னர் அம்ரு இப்னுலைது சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அவனை காப்பாற்ற அவனது தாய் முயற்சி செய்தும் பலனில்லை. கடைசியாக மனு ஒன்றை கொடுப்பதற்காக கவர்னர் செல்லும் வழியில் காத்திருந்தாள். குதிரை மீது கம்பீரமாக வந்த அம்ரு, ''யார் இவள்? எதற்காக நிற்கிறாள்?'' எனக் காவலர்களிடம் கேட்டார்.
அப்போது அவள், ''பிரபு... சிறையில் வாடும் என் மகன் நிரபராதி. அவனை விடுவிக்க உத்தரவிடுங்கள்'' எனக் கண்ணீருடன் மனுவைக் கொடுத்தாள்.
அம்ருவின் மனம் இரங்கவில்லை.
'' காவலர்களே...சிறையில் கிடக்கும் இவளது மகனுக்கு நுாறு கசையடி கொடுப்பதோடு, அனைவருக்கும் பாடம் புகட்டும் விதத்தில் அவனை வீதியில் இழுத்துச் செல்லுங்கள்'' என்றார்.
''உங்களின் மனம் போன போக்கில் அநீதி வழங்கினால் இறைவனின் நீதி என்னாவது?'' என அந்த தாய் ஆவேசமாக கத்தினாள்.
அதைக் கேட்டதும் நிரபாராதிக்கு அநீதி இழைப்பது பாவம் என்ற எண்ணம் கவர்னருக்கு ஏற்பட்டது. இளைஞனை விடுவிக்க உத்தரவிட்டதோடு, அநீதியில் இருந்து தன்னைக் காப்பாற்றிய அந்த பெண்ணுக்கு நன்றி கூறினார். மனம் போன போக்கில் தீங்கு செய்யாதே; நடுவுநிலை தவறாதே என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

