ADDED : டிச 17, 2025 01:37 PM

இளவரசன் ஒருவன் துறவி ஒருவரிடம் சீடனாக ஏற்கும்படி வேண்டினான்.
''எங்கிருந்து வருகிறாய்?'' எனக் கேட்டார்.
''பக்கத்து நாட்டு இளவரசனான என் பெயர் ஹாரூன்'' என்றான்.
''உன்னை நீயே மறக்கும் அளவுக்கு ஆர்வமுடன் எதிலாவது ஈடுபட்டதுண்டா'' எனக் கேட்டார்.
''சதுரங்கம் விளையாட பிடிக்கும்'' என்றான்.
சீடர்களில் ஒருவனை சதுரங்க அட்டையுடன் வருமாறு அழைத்தார் துறவி.
வந்த சீடருக்கு விளையாடத் தெரிந்தாலும், அதன் நுணுக்கம் தெரியாது. இந்நிலையில் '' நடக்கவிருக்கும் போட்டியில் நீ தோற்றால் என் சீடனாக தொடர முடியாது'' என அதிர்ச்சியளித்தார் துறவி.
இளவரசனிடம், ''நீ தோற்றால் உன்னை சீடனாக ஏற்க முடியாது'' என்றும் தெரிவித்தார்.
போட்டியில் இளவரசன் அருமையாக விளையாடவே அவனது வெற்றி நிச்சயமாகி விட்டது. இந்நிலையில் இளவரசன் நிமிர்ந்து பார்த்த போது, சீடர் இயல்பாக இருந்தார். துறவியின் மீதுள்ள ஆழ்ந்த நம்பிக்கையால் அவருடைய முகம் பிரகாசித்தது. இந்த நல்லவரின் வாழ்க்கை வீணாகி விடக் கூடாது என வருந்தினான். தோற்றால் சீடராக அவரால் தொடர முடியாதே என்பதால் இரக்கப்பட்டார்.
வேண்டுமென்றே சதுரங்க காய்களை தவறாக நகர்த்தினான்.
அப்போது ஆட்டத்தை கலைத்து விட்டு, ''இருவரும் வெற்றியாளர்தான்'' என சிரித்தார் துறவி.
மேலும் இளவரசனிடம், ''மகனே நீ வென்று விட்டாய். உன்னுடைய வெற்றி இந்த சீடரின் வெற்றியை விட மதிப்பு மிக்கது. இப்போதே உன்னை சீடனாக்கி கொள்கிறேன்'' என்றார்.
சுயநலத்தை கைவிட்டு தியாகம் செய்பவனே உயர்ந்த மனிதன்.
