ஷெய்க் அப்துல் காதிர் என்ற சிறுவன் ஜீலான் நகரில் வசித்தான். படிப்பில் ஆர்வம் கொண்ட அவன் பாக்தாத் நகருக்கு செல்ல ஆசைப்பட்டான்.
காரணம் அங்கு படித்தவர்கள் பலர் இருந்தனர். அம்மாவிடம் இதைச் சொன்னான். ஆனால் அவரோ வெளியூருக்கு அனுப்ப தயங்கினார். அக்காலத்தில் போக்குவரத்து வசதி இல்லை. நடந்தோ, குதிரை, ஒட்டகத்தில்தான் சென்றாக வேண்டும். வழியில் வரும் திருடர்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும். அதனால் பெரும்பாலும் ஒட்டகக் கூட்டத்தாருடன் மக்கள் பயணம் செய்தனர். ஒருவழியாக அவனுடைய அம்மா, ஒட்டகக்கூட்டாத்தாருடன் பேசி பாக்தாத் நகருக்கு செல்ல ஏற்பாடு செய்தார்.
புறப்படும் முன் நாற்பது தினார்களை அவனுடைய சட்டையில் வைத்து தைத்துக் கொடுத்தாள். ''காதிர்... உண்மையைப் பேசு. உயிருக்கே ஆபத்து என்றாலும் பொய் சொல்லாதே'' என்றாள். அவனும் சரி என புறப்பட்டான். சிறிது துாரம் சென்றதும் திருடர்கள் வழிமறித்தனர். திருடன் ஒருவன், ''சிறுவனே.. உன்னிடம் ஏதாவது பணம் உள்ளதா'' என காதிரிடம் கேட்டான்.
''40 தினார்கள் உள்ளன'' என்றான். அவன் அணிந்துள்ள எளிய ஆடையைப் பார்த்து விட்டு, ''என்னைப் பார்த்தால் பைத்தியம் போல தெரிகிறதா'' என கோபப்பட்டான் திருடன். ''இல்லை.. நான் உண்மையைத்தான் சொல்கிறேன். என் ஆடைக்குள் நாற்பது தீனார்கள் வைத்து தைக்கப்பட்டிருக்கின்றன'' என மீண்டும் சொன்னான் காதிர்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த திருடர்களின் தலைவன், அவனது ஆடையைக் கிழித்தான். உடனே அவை கொட்ட ஆரம்பித்தன. ''ஏண்டா... இவ்வளவு பத்திரமாக வைத்திருந்த பணத்தை, நாங்கள் கேட்டதும் ஏன் சொன்னாய்'' எனக்கேட்டான். ''எத்தகைய ஆபத்து நேர்ந்தாலும் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என எனது அம்மா கூறியிருக்கிறார். அவரது பேச்சை எப்படி மீற முடியும்'' என துணிச்சலாக பதிலளித்தான் காதிர்.
இவனது பேச்சைக் கேட்டதும் திருடனின் மனம் குத்தியது. 'இந்த சிறுவன் உண்மையை பேசுகிறான். ஆனால் நானோ தடிப் பயல்களை வைத்து திருடுகிறேனே'' என வருந்தினான். கொள்ளையடித்த பொருட்களை எல்லாம் அவர்களிடம் கொடுத்து விட்டு திரும்பினர் திருடர்கள்.

