
முல்லா வசித்த ஊருக்கு அடுத்த கிராமத்தில் முட்டை விற்கக் கூடாது என கட்டளையிட்டார் மன்னர். இதுதான் சம்பாதிக்க நல்ல சந்தர்ப்பம் என முட்டைகளை விற்க கூடையுடன் புறப்பட்டார் முல்லா. கிராமத்தின் எல்லையில் இருந்த காவலர்கள், 'கூடைக்குள் என்ன இருக்கு?' எனக் கேட்டனர்.
''கோழிக்குஞ்சு''
'' காட்டுங்கள்''
''சொல்வதை நம்ப மாட்டீர்களா...''
''சோதனை செய்த பிறகே அனுமதிப்போம்'' என கூடையை திறந்தனர். முட்டைகள் இருந்தன.
''பொய் சொல்கிறாயா... முட்டைவிற்கக் கூடாது என்பது மன்னரின் உத்தரவு'' என கோபித்தனர்.
''பொய் சொல்லவில்லை. இப்போதும் சொல்கிறேன். கோழிக்குஞ்சுகள் தான் உள்ளன'' என அடம் பிடித்தார் முல்லா.
''பைத்தியம் பிடித்து விட்டதா... ஒழுங்கா ஊருக்கு போகும் வழியைப் பார். இல்லாவிட்டால் சிறையில் தள்ளிவிடுவோம்'' என எச்சரித்தனர்.
''முட்டாளாக இருக்கீங்களே... முட்டைக்குள் என்ன இருக்கு'' எனக் கேட்டார் முல்லா.
''கோழிக்குஞ்சு'' என்றனர்.
''பிறகு ஏன் என்னை தடுக்கிறீர். வழியை விடுங்கள்'' என நடக்க ஆரம்பித்தார் முல்லா.
சாதுர்யமான பேச்சினால் தப்பித்தார். என்ன செய்வதென தெரியாமல் காவலர்கள் விழித்தனர்.

