பட்டத்து யானை ஒன்று ஊருக்குள் சுதந்திரமாக உலாவும். விரும்பியதை உண்ணும். ஒருநாள் இப்படி சென்ற போது மக்களை தாக்கியது. யானைப்பாகனோ அதை மன்னரிடம் சொல்லவில்லை. இதையறிந்த முல்லா, 'யானை வருவதைக் கண்டால் அதற்கு வயிறார உணவளியுங்கள். சந்தோஷத்தில் அமைதியாகி விடும். அதைக் கட்டி வையுங்கள்'' என்றார்.
''பட்டத்து யானையை கட்டி வைக்கலாமா'' என மக்கள் பயந்தனர். ''யாராவது கேட்டால் என் பெயரைச் சொல்லுங்கள்'' என்றார் முல்லா. மக்களும் அப்படியே செய்ய, மன்னரின் கவனத்திற்கு விஷயம் போனது. ''ஏன் யானையை கட்டி வைக்க சொன்னீர்கள்'' என முல்லாவிடம் கேட்டார் மன்னர்.
''யானைக்கு திருமண ஆசை வந்து விட்டது. அதனால் பெண்யானையை தேடுகிறது. அதை நிறைவேற்றவே இப்படி சொன்னேன்'' என்றார் முல்லா. ''என்ன விளையாடுகிறீரா...'' எனக் கேட்டார் மன்னர்.
''உண்மையைத் தான் சொல்கிறேன். யானையை நேரில் பாருங்கள்'' என்றார். முல்லாவுடன் சென்ற மன்னருக்கு உண்மை புரிந்தது. யானை ஒருநிலையில் இல்லாமல் பரபரப்புடன் இருந்தது. அதை காட்டில் விட உத்தரவிட்டார். முல்லாவுக்கு பரிசு கொடுத்தார் மன்னர்.

