ADDED : மார் 05, 2026 08:57 AM

அரசு வேலைக்காக பலமுறை முயற்சி செய்தும் ஷாஹித் வெற்றி பெறவில்லை.
மனச் சோர்வுடன் இருந்த அவன், கிராமத்தில் தாத்தா வீட்டுக்குச் சென்றான். அவரிடம் சொல்லி வருந்தினான். அப்போது அவர் சொன்ன கதை இது.
கூண்டில் அடைத்து புறா ஒன்றை வளர்த்தார் ஒருவர். அதற்கு இறக்கை முளைத்ததால், சுதந்திரமாக பறக்க விரும்பியது. அது பறக்க முயற்சிக்கும் போதெல்லாம் இறக்கை வெட்டப்பட்டது. ஒரு கட்டத்தில் கூண்டில் இருந்து வெளியேறி அறையில் சுதந்திரமாக விளையாடியது. அப்போது இறக்கையோ அடர்த்தியாக இருந்தது.
ஆனால் பறக்க முயற்சி செய்யவில்லை. தன்னால் பறக்க இயலாது என்ற முடிவுக்கு வந்தது. பாவம் கடைசி வரை வீட்டுக்குள்ளேயே வாழ்ந்து மறைந்தது.
''இப்போது சொல். புறாவைப் போல நீயும் அடைபட்டுக் கிடக்கிறாயா... இல்லை. சிறகடித்து பறக்க விரும்புகிறாயா. தோல்வி தடையல்ல. 'ஜெயித்துக் காட்டுவேன்' என நம்பிக்கையுடன் செயல்படுவதே முக்கியம்'' என்றார்.

