ADDED : மார் 26, 2026 12:31 PM

இப்னு தினார் என்பவர் தன் பெண் குழந்தையின் மீது அதிக அன்பு கொண்டவர். தினமும் குடிக்கும் பழக்கம் உள்ளவர். அவர் குடிக்கும் போதெல்லாம் அவர் கையிலுள்ள மதுவை தட்டி விடுவாள். அவள் மீது உள்ள பாசத்தால் கோபிக்க மாட்டார். அந்தக் குழந்தை உடல்நலக் குறைவால் இறந்தாள். மகளின் இழப்பை தாங்க முடியாத அவர் மேலும் குடிக்கு அடிமையானார்.
ஒருநாள் துாங்கும் போது கனவு வந்தது. அதில் அவரது இறுதிக்காலம் நெருங்கியது. இறந்தவர்கள் நுழையும் 'மஹஷர்' என்ற மைதானத்திற்குள் நுழைந்தார். அங்கு இருந்த கருநாகம் அவரை விரட்டியது. அந்த நேரத்தில் வெள்ளை ஆடை அணிந்த பெரியவர் ஒருவர் எதிரில் வந்தார்.
''ஐயா... இந்த பாம்பிடம் இருந்து காப்பாற்றுங்கள்'' எனக் கதறினார்.
''இதோ தெரியும் அந்த மலை மீது ஏறினால் பிழைப்பாய்'' என்றார். மலை மீது ஏறியதும் அங்கே நரகம் இருந்தது. அங்கு நெருங்கியதும், 'நீ நரகவாசி அல்ல' என குரல் கேட்டது. திரும்பி ஓடினார். மீண்டும் அப்பாம்பு அவரை துரத்தியது. அதே பெரியவர் எதிர்ப்பட்டார். அவர், ''முதியவனான என்னால் உனக்கு உதவ முடியாது. அதோ தெரிகிறதே... அந்த குன்றின் மீதேறு'' என சொல்லி விட்டுச் சென்றார்.
தினார் அந்த குன்றின் மீதும் ஏறினார். அங்கு கதவு, திரைகள் தென்பட்டன. அங்கு மலக்குகள் (வானவர்கள்), ''கதவைத் திறங்கள், திரைகளை விலக்குங்கள். இதோ... இந்த மனிதன் செய்த நன்மையின் பலன் அவருக்கு கிடைக்கட்டும்'' என்றனர். கதவு திறந்ததும் உள்ளிருந்து குழந்தைகள் வந்தனர். அதில் தினாரின் இறந்த மகளும் இருந்தாள்.
தினாரைக் கண்டதும், 'அப்பா' எனச் சொல்லியபடி கட்டி பிடித்தாள். பாம்பை அவள் விரட்டவே அது மறைந்தது. அவளிடம், ''பாம்பு எங்கே'' எனக் கேட்டார் தினார்.
''நீங்கள் செய்த பாவம் தான் அது'' என்றாள்.
''அப்படியா. பாம்பு துரத்திய போது முதியவர் ஒருவர் வந்தாரே...'' எனக் கேட்டார்.
''ஓ... அவரா... நீங்கள் செய்த நன்மையால் தான் அவர் வந்தார். அதனால்தான் பாவத்தில் (கருநாகம்) இருந்து தப்பினீர்கள்'' என்றாள்.
''நீ என்ன செய்கிறாய்''எனக் கேட்டார்.
''உங்களுக்கு இறுதிக்காலம் வரும் வரை இங்கு காத்திருப்பேன். மஹ்ஷர் மைதானத்தில் நீங்கள் நுழைந்ததும் சிபாரிசு செய்வேன்'' என்றாள். கனவு கலைந்தது. அன்றோடு குடிப்பழக்கத்தை விட்டார்.
பார்த்தீர்களா... ஒழுக்கமே உங்களைக் காப்பாற்றும்.
