ADDED : மே 14, 2026 12:34 PM
இயால் என்ற கொள்ளைக்காரன் குர்ஆன் வசனம் கேட்டு மனம் திருந்தி கொள்ளையடிப்பதை கைவிட்டான். 'பிறர் பொருளை அநியாயமாக எடுத்தால், அதை அவரிடமே ஒப்படைத்து, மன்னிப்பு கேட்டால் பாவம் மன்னிக்கப்படும்' என்ற அடிப்படையில் அந்த குர்ஆன் வசனம் இருந்தது.
முடிந்தவரை பணத்தை ஒப்படைத்து மன்னிப்பு கேட்டார் இயால். ஆனால் ஒரு நபர் மட்டும் பிடிவாதமமாக 'பணம் முழுமையாக கொடுக்காவிட்டால் மன்னிக்க முடியாது' என மறுத்தார். இயால் எவ்வளவோ கெஞ்சினார். ''என்னிடம் திருடிய பணத்தில் சிறிதளவாவது கொடு. இல்லாவிட்டால் மன்னிக்க மாட்டேன்'' என்றார் அவர்.
'' இறைவனின் மீது ஆணையாக என்னிடம் பணமே இல்லை'' என்றார் இயால்.
''அப்படியானால் கைப்பிடி மண்ணை எடுத்து என் பையில் போடும்''என அந்த நபர் சொல்ல, இயாலும் அப்படியே செய்தார். அந்த நபர் சட்டைப் பையில் கையை விட்ட போது அந்த மண் பொன்னாக மாறியிருந்தது.
இதைக் கண்டு ஆச்சசரியப்பட்ட அந்த நபர், '' இயால்... உம் பாவமன்னிப்பு இறைவனால் ஏற்கப்பட்டு விட்டது. யாருடைய பாவமன்னிப்பு கபூல் ஆயிற்றோ (ஏற்கப்பட்டதோ) அவர் மண்ணைக் கொடுத்தாலும் பொன்னாகி விடும்' என்றார்.
