ADDED : மே 28, 2026 11:02 AM
பாபிலோனை ஆட்சி செய்த கொடுங்கோல் மன்னர் நம்ரூத். ஆணவம் கொண்ட இவரைக் கொல்ல ஒரு ஆண் குழந்தை பிறக்கப் போவதாக குறி சொல்பவர்கள் தெரிவித்தனர். அந்தக் குழந்தை பிறக்கக் கூடாது என பல திட்டங்களை தீட்டினான். பிறக்கப் போகும் ஆண் குழந்தைகளை எல்லாம் கொல்லுங்கள் என ஆணையிட்டான்.
தான் கர்ப்பமாக இருப்பதை மறைத்து வைத்திருந்த ஒரு பெண், தன் கணவரான ஆஜரிடம் சொன்னாள். அதற்கு அவர், '' பெண் குழந்தையாக இருந்தால் கவலையில்லை. ஒருவேளை ஆணாக இருந்தால் மன்னரிடம் ஒப்படைத்துவிடுவேன்'' என்றார்.
பிரசவ நாள் நெருங்கியது. அந்தப் பெண் சமயோஜிதமாக உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி, ஒரு மலை குகையில் பிரசவித்தாள். ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை அங்கேயே பாதுகாத்தாள். குகையை விட்டு வெளியே வந்த அவள் வாசலை கல்லைக் கொண்டு மூடினாள். கணவரிடம் சென்று, ''ஆண் குழந்தை இறந்தே பிறந்தது.
அதனால் அதை குகைக்குள்ளேயே புதைத்து விட்டேன்'' என பொய் சொன்னாள். அதை உண்மை என நம்பிய கணவர் ஆஜரும் அமைதியானார். தினமும் குகைக்கு சென்று குழந்தையை கவனித்து வந்தாள் அந்தப்பெண். நம்ரூத்தை கொல்லப் போகும் அந்தக் குழந்தையே ஹஜ்ரத் இப்றாஹீம் ஆவார்.
