ADDED : மே 28, 2026 11:10 AM
பணக்காரர் ஒருவரை சந்தித்தார் முல்லா. அப்போது கேரட், பீன்ஸ் கொண்ட சூப்பை குடித்துக் கொண்டிருந்தார். ''வாருங்கள். முல்லா... சரியான நேரத்தில்தான் வந்துள்ளீர்கள். சைவ உணவு தயாராக உள்ளது. சாப்பிடுங்கள்'' என்றார்.
''நீங்கள் சைவம் மட்டும் தான் சாப்பிடுவீர்களா...'' எனக் கேட்டார் முல்லா.
''ஆம். உயிர்களை நான் நேசிக்கிறேன். பறவை, விலங்கு என எல்லா உயிர்களும் சேர்ந்தது தானே இந்த உலகம். அப்படியிருக்க அசைவத்தை எப்படித்தான் விரும்பிச் சாப்பிடுகிறார்களோ...'' என்றார்.
அவருக்கு பாடம் புகட்ட எண்ணிய முல்லா, ''நாம் இருவரும் ஒரே கருத்து கொண்டவர்கள். ஒருமுறை என்னை காப்பாற்றியது சிறிய உயிரினமான மீன் தான்'' என சொன்னார்.
''அற்புதம். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்களை மீன் எப்படி காப்பாற்றியது எனச் சொல்லுங்கள்'' எனக் கேட்டார்.
''இரண்டு நாளாக சாப்பிடாமல் இருந்த போது, பொறித்த மீனைச் சாப்பிட்டே பசியாறினேன்'' என்று சிரித்தார் முல்லா.
அதிர்ச்சி அடைந்த பணக்காரருக்கு பேச்சு வரவில்லை. முல்லா சிரித்தபடி, ''உணவு என்பது அவரவர் விருப்பத்தை சார்ந்தது. இதில் மற்றவரை குறைவாக பேசத் தேவையில்லை'' என்றார்.
