ADDED : ஜூன் 11, 2026 11:13 AM
மரணப் படுக்கையில் கிடந்தார் அல்காமா என்ற தோழர். சாகும் நிலையில் உள்ள அவரிடம் 'கலிமா' சொல்லும்படி துாண்டினாள் மனைவி. 'இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவரும் இல்லை. நபிகள் நாயகம் அவனுடைய துாதர்' என்னும் உறுதிமொழியே கலிமா. ஆனால் தோழரால் அதை சொல்ல முடியவில்லை.
தொழுகை, நோன்பு என அனைத்தையும் நிறைவேற்றிய என் கணவருக்கா இந்த நிலை என பதறினாள். இதை கேள்விப்பட்ட நாயகம், உடனே அவர் பிலால், சுஹைப், அம்மார் ஆகியோரை அனுப்பி வைத்தார். அவர்களும் கலிமாவைச் சொல்லும்படி துாண்டினர். அப்போதும் சொல்ல முடியவில்லை. இதையறிந்த நாயகம், ''தோழரின் பெற்றோர் உயிருடன் இருக்கிறார்களா...'' எனக் கேட்ட போது, வயதான தாயார் மட்டும் இருப்பதாக கூறினர்.
''முடிந்தால் என்னிடம் தாயாரை வரச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் நான் சந்திக்கிறேன்'' என்றார்.
விஷயமறிந்த மூதாட்டி மெதுவாக நடந்து வீட்டுக்கு வந்தார். அவரிடம், ''உங்கள் மகன் அல்காமா இறைவழியை பின்பற்றுபவர். அவர் உங்களிடம் எப்படி நடந்து கொள்வார்'' எனக் கேட்டார்.
மூதாட்டி அழுதபடி, ''அவன் நல்லவன் தான். ஆனால் அவனுக்கு திருமணமான பிறகு என்னை சரிவர கவனிக்க வில்லை. அலட்சியப்படுத்தினான். அவன் மீது எனக்குக் கோபம் தான்'' என்றார். சிறிது நேரம் யோசித்தபடி அருகில் இருந்த தோழர்களிடம் விறகு கட்டைகளை எடுத்து வருமாறு கூறினார்.
''எதற்காக விறகுகள்'' எனக் கேட்டார் மூதாட்டி.
''உங்கள் கண் முன்னாலேயே அல்காமாவை எரிக்கப் போகிறேன்''
''என்ன கொடுமை இது. என்னால் தாங்க முடியாது''
''அம்மா... உங்களின் கோபம்தான் கலிமா சொல்லவிடாமல் தடுக்கிறது. நீங்கள் மன்னிக்காவிட்டால், அல்காமா நரக நெருப்பில் வீசி எறியப்படுவார். அவர் செய்த தொழுகை, நோன்பு, தர்மம் எதுவுமே பயனளிக்காது. நீங்கள் மன்னித்தால் மட்டுமே இறைவனும் மன்னிப்பான்'' என்றார்.
மூதாட்டி அழுதபடியே, ''அவன் மீது ஆணையாக! அல்காமாவை மன்னித்தேன்'' என்றார். அந்த நேரத்தில் அல்காமாவும் கலிமாவை சொல்ல அவருடைய உயிர் மென்மையாக பிரிந்தது.
