ADDED : ஜூன் 25, 2026 10:55 AM
கலீபாவான உமர் தோழர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். வெயில் அதிகமாக இருந்ததால் ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தார். அந்த வழியாக சிறுவன் ஒருவன் ஆட்டு மந்தையுடன் வந்தான். அவனிடம் விளையாட்டாக, ''இந்த ஆடுகளில் ஒன்றை எனக்கு விலைக்கு கொடு'' என்றார் உமர்.
அதற்கு சிறுவன், ''நான் ஒரு கூலியாள். என் முதலாளியின் அனுமதியின்றி விற்க முடியாது'' என்றான்.
''ஆடு குறைவது தெரியவந்தால் ஓநாய் வந்து ஆட்டைத் துாக்கிச் சென்று விட்டதாகச் சொல்'' என்றார்.
உடனே சிறுவன் வானத்தை நோக்கி, ''அவன் எல்லாவற்றையும் பார்க்கிறானே... அவனிடம் என்ன பதில் சொல்வது? பொய் சொல்ல வெட்கமாக உள்ளது'' என்றான் தழுதழுத்த குரலில். சிறுவனின் பதிலைக் கேட்ட உமர் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டார். அவனுடைய நேர்மையை பாராட்டியதோடு அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்தார்.
