ADDED : ஜூலை 02, 2026 10:31 AM
நாசர் ஸ்கூலுக்கு போக மாட்டேன் என அடம் பிடித்தான். அவனது அப்பா ஏன் எனக் கேட்டதற்கு, ''இன்னைக்கு எக்ஸாம் இருக்கு. சரியா படிக்கல. டீச்சருக்கு தெரிஞ்சா திட்டுவாங்க'' என அழுதான்.
''அதனால என்னடா. தெரிஞ்சதா எழுதிட்டு வா'' என்றார் அப்பா.
''அதெல்லாம் முடியாது. டீச்சர்கிட்ட பல் வலிக்குதுன்னு சொல்லிட்டேன்'' என இழுத்தான்.
அவரும் மறுப்பு ஏதும் சொல்லாமல்,''சரி. உன் இஷ்டம்'' என்றார்.
மறுநாள் ஞாயிறன்று வீட்டுக்கு வந்த நண்பன் அமீர், ''டேய் நாசர். ஏன்டா நேத்து வரல...'' எனக் கேட்டான்.
''சரியாவே படிக்கலையா... அதான்'' என இழுத்தான்.
''போடா போ.. ஏற்கனவே நாம் இரண்டு பேரும் சேர்ந்து படிச்சோமே அதில் இருந்து தான் நிறைய கேட்டிருந்தாங்க. மிஸ் பண்ணிட்டியே'' என கொஸ்டின் பேப்பரை காட்டினான்.
இதைப் பார்த்ததும் நாசருக்கு அழுகை வந்தது. இதை கவனித்த அப்பா, ''சரி. அழாதே... இனியாச்சும் எக்ஸாம நினச்சு பயப்படாம, நாம படிச்சதுதான் வரும்ணு நம்பு. பாசிட்டிவா இரு. அது தான் உன்னை வாழ வைக்கும்'' என்றார்.
