ADDED : ஜூலை 09, 2026 10:25 AM
மதிய நேரம் அது. அப்துல் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தான். அவனுக்கு மிகவும் பசித்தது. அவனுக்குப் பிடித்த பிரியாணி மேஜையில் இருப்பதை பார்த்தான். கை கழுவாமல் ஒரு வாய் சாப்பிட்டான். அதைப் பார்த்த அவனுடைய பாட்டி,''டேய்... குட்டி. இப்படி செய்யாதே. நம் உணவில் 'பரகத்' (இறையருள்) கிடைக்க வேண்டுமென்றால் சில விஷயங்களை நாம் செய்யணும்'' என்றார்.
அப்துல் ஆர்வத்துடன், ''என்ன செய்யணும் பாட்டி'' எனக் கேட்டான்.
''அவனருள் கிடைத்தால் உண்ணும் உணவு உடலுக்கு வலிமை, மனதிற்கு மகிழ்ச்சியை தரும். அதற்கு சாப்பிடுவதற்கு முன் கை கழுவ வேண்டும். பின் 'பிஸ்மில்லாஹ்' எனச் சொல்லி விட்டு சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் ைஷத்தான் நம்மை நெருங்க மாட்டான். அதைப் போல் வலது கையால் மட்டுமே சாப்பிட வேண்டும். ஒருபோதும் உணவை குறை சொல்லக் கூடாது. ஏனெனில் உணவு இறைவன் தந்த அருட்கொடை'' என்றார் பாட்டி.
உடனே கைகளை நன்கு கழுவிய பின் சாப்பிட அமர்ந்தான் அப்துல். 'பாட்டி... பிரியாணி செம டேஸ்டா இருக்கு' என சந்தோஷப்பட்டான்.
