ADDED : ஜூலை 09, 2026 10:30 AM
ஒரு மாலை நேரத்தில் சிறுவன் சமீர் விளையாடுவதற்காக மைதானத்திற்குள் நுழைந்தான். வாசலில் பெரியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரைக் கண்டு கொள்ளாமல் அவசரமாக கிரிக்கெட் விளையாட சென்றான். இதை கவனித்த அவரது கோச், ''சமீர் இங்கே... வா'' என்றதும், ''இதோ வந்துட்டேன் சார்'' என அருகில் சென்றான்.
''அந்த பெரியவருக்கு ஏன் 'ஸலாம்' சொல்லவில்லை'' எனக் கேட்டார்.
''சார். அது வந்து. ஏதோ அவசரத்தில் அப்படி செஞ்சுட்டேன்'' என இழுத்தான்.
''சமீர். ஸலாம் என்பது வெறும் வணக்கம் மட்டுமல்ல. அது ஒரு அழகான பிரார்த்தனை. நீ ஒருவருக்கு ஸலாம் சொல்லும் போது, 'உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்' என தெரிவிக்கிறாய். நீ சின்ன பையன். நீ அந்த பெரியவருக்கு ஸலாம் சொன்னால் அவர் எப்படி சந்தோஷப்படுவார் தெரியுமா'' என்றார்.
உடனே பெரியவரிடம் ஓடிய சமீர், ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹ்'' என்றான் புன்னகையுடன். பெரியவரும் முகம் மலர்ந்து, ''வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹ்... நல்லா இரு பையா'' என்றார்.
