ADDED : ஜூலை 23, 2026 08:58 AM
அடுக்குமாடி வீடு ஒன்றில் வாடகைக்கு வந்தார் அன்வர். அவரது மனைவி பாஹியா பொருட்களை அடுக்கி விட்டு, சமையல் வேலையை ஆரம்பித்தாள். இவர்களின் மகள் ஹசனா விளையாடிக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் சுடச்சுட பணியாரம் தயாரித்தாள் பாஹியா.
''குட்டிம்மா... பணியாரம் எடுத்துக்கோ'' என மகளைக் கூப்பிட்டாள்.
''இதோ வர்றேம்மா...'' என கிச்சனுக்குள் ஓடினாள் மகள்.
தட்டில் பணியாரத்தை எடுத்து வந்தாள். அதைப் பார்த்த அன்வர், ''பாப்பா... நேத்து பார்த்தோமே... அந்த பக்கத்துவீட்டு பாட்டிக்கு கொடுத்துட்டு வா'' என்றார்.
''அப்பா... அவங்க நேத்து நம்மட்ட சரியாவே பேசலயே. அவங்களுக்கு ஏன் நாம கொடுக்கணும்'' எனக் கேட்டாள் மகள்.
''அப்படி சொல்லக் கூடாது. பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு உதவியா இருக்கணும். அப்பத்தான் இறைவன் சந்தோஷப்படுவான்'' என்றார் அன்வர்.
சிறுமியும் பணியாரத்தை பாட்டிக்கு எடுத்துக் கொண்டு போனாள். அண்டை வீட்டாரின் அன்பை உணர்ந்த பாட்டியின் முகம் மலர்ந்தது. அதை வாங்கிக் கொண்டு, சிறுமியை வாழ்த்தினார். அன்று முதல் அன்வரின் குடும்பத்தில் ஒருவராக மாறினார் அந்த பாட்டி.
