ADDED : ஜூலை 23, 2026 09:05 AM
தோழர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார் நபிகள் நாயகம். அப்போது குறிப்பிட்ட ஒரு வாசலைக் காட்டி, ''இப்போது இந்த வழியாக ஒரு சொர்க்கவாசி வரப் போகிறார்'' என்றார்.
அவர் சொல்லியபடி ஒருவர் வந்தார். இவரை ஏன் சொர்க்கவாசி என்கிறார் என்ற ஆர்வம் அவர்களுக்குள் எழுந்தது.
அந்த மனிதர் தினமும் என்ன செய்வார் என்பதை பார்க்க, அவரது வீட்டுக்குச் சென்றார் ஒருவர். அந்த மனிதர் தொழுகை செய்வார், தர்மச் செயல்களில் ஈடுபடுவார் என நினைத்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம். அவர் சாதாரணமாக தன் பணிகளை செய்தார். நிம்மதியாக துாங்கினார். காலையில் எழுந்தார். இப்படி தினமும் தன் பணிகளை வழக்கம் போல செய்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அவர், ''நீங்கள் தினமும் தர்மம் செய்வீர்களா'' எனக் கேட்டார்.
''என்னிடம் அவ்வளவு வசதி இல்லை. ஆனால் நான் துாங்கச் செல்வதற்கு முன், அன்று யாராவது எனக்கு தீமை செய்தால் அவர்களை மனதார மன்னிப்பேன். யாரையும் எதிரியாக கருத மாட்டேன்'' என்றார். துாய எண்ணம், மன்னிக்கும் குணம் மனிதனை வாழ வைக்கும்.
