ADDED : ஆக 03, 2026 01:38 PM

நபிகள் நாயகத்தின் மகள் ஜைனபிடமிருந்து அவசரச் செய்தி ஒன்று வந்தது. ஜைனபின் மகள் இறக்கும் நிலையில் உள்ளதாக அதில் இருந்தது.
அதற்கு, ''ஜைனபுக்கு என் ஸலாம் சொல்லுங்கள். உயிரைக் கொடுப்பதற்கும், எடுப்பதற்கும் உரிமை கொண்டவன் இறைவன் ஒருவனே. ஒவ்வொன்றுக்கும் ஒரு தவணை உண்டு. பொறுமையை கடைப்பிடித்து நன்மையை எதிர்பார்க்கச் சொல்லுங்கள்'' என பதில் அனுப்பினார். இதையறிந்த ஜைனப், ''என் தந்தையார் நாயகத்தை உடனே அழைத்து வாருங்கள். அவர் என் மகளை ஒருமுறை பார்க்க வேண்டும்'' என மீண்டும் தகவல் அனுப்பினார்.
ஜைனப் வீட்டிற்கு வந்த நாயகம், மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பேத்தியைக் கண்டதும் அழுதார். அருகில் நின்ற தோழர்களிடம், ''இறைவன் தன் அடியார்களின் மனதில் ஏற்படுத்தும் இரக்க உணர்வே கண்ணீர். இரக்கம் கொள்பவர் மீது அவனும் இரக்கம் கொள்வான்'' என்றார்.
