ADDED : ஆக 13, 2026 08:28 AM
சுட்டிப்பையன் ஜமால் வீட்டில் பட்டுப்புழு வளர்த்தான். அது தன்னைச் சுற்றி கூட்டைக்கட்டி உள்ளே வசித்தது. பட்டுப்பூச்சியாக மாறி வெளியே வர முயற்சித்தது அந்த புழு. கூட்டிலிருந்து வெளியில் வருவது கஷ்டம். பலமணி நேரம் போராடினால் தான் வெளியே வர முடியும். ஆனால் ஜமாலுக்கோ பொறுமை இல்லை. கத்தியால் கூட்டை கிழித்து பூச்சியை வெளியே எடுக்க பார்த்தான்.
அதைப் பார்த்த அவனது தந்தை, ''டேய்... என்ன பண்ற..'' என அவன் கையை தள்ளி விட்டார். ''பாவம் அப்பா... அதுக்கு வெளியே வரத் தெரியல''
''நல்லவேளை.. நான் வரலன்னா பூச்சி செத்திருக்கும்''
''என்ன சொல்றீங்க அப்பா...''
'' கூட்டில் இருந்து வெளியே வர நீண்டநேரம் முயற்சி செய்யும். அப்போது, அதன் தசை, நரம்புகள் பலமாகும். உடல் எடையும் குறையும். இப்படி இருந்தால்தான் அதனால் பறக்க முடியும். ஒருவேளை நீ கூட்டை கிழித்தால் அது கீழே விழும்.
எதற்கும் ஒரு காலமுண்டு. அதுவரை பொறுமையாக இரு'' என்றார்.
