ADDED : ஆக 13, 2026 08:34 AM
சிறுவன் தாஹிர் சுறுசுறுப்பானவன். கிரிக்கெட் என்றால் அவனுக்கு கொள்ளை ஆசை. ஒரு ஞாயிறன்று காலையில் நண்பர்களுடன் விளையாட தயாராக இருந்தான். நண்பர்களும் சொன்னபடியே காலையில் வந்தனர். தாஹிர் ஷூ மாட்டிக் கொண்டு பேட்டுடன் கிளம்ப தயாரானான். அப்போது அவனுடைய அம்மா சமையல் அறையில் பரபரப்புடன் சமைத்துக் கொண்டிருந்தாள். அன்று விருந்தினர் சிலர் வருவதாக இருந்தனர்.
அம்மாவை பார்த்ததும் தாஹிரின் மனதில் தயக்கம் ஏற்பட்டது. 'அம்மாவுக்கு உதவி செய்யாமல் விளையாட போறோமே... இன்னிக்குதான் ஸ்கூல் லீவு தானே. இன்று ஒருநாளாவது அம்மாவுக்கு உதவி செய்யலாமே' என நினைத்தான்.
அவனுடைய ஆசிரியர் சொன்னது நினைவுக்கு வந்தது
'தாயின் காலடியில் தான் சுவர்க்கம் இருக்கிறது'
நண்பர்களிடம், 'நான் விளையாட வரவில்லை' என சொன்னான். ''அம்மா... நான் உதவி செய்யலாமா'' எனக் கேட்டான்.
''விளையாடப் போகவில்லையா'' என அம்மா கேட்டார்.
''அடுத்த வாரம் போறேன்மா'' என சொல்லியபடி காய்கறிகளை கழுவினான். வீட்டைச் சுத்தம் செய்தான். அப்போது சாப்பாடும் தயாரானது. அவனது அம்மா அப்போது, 'இறைவன் உனக்கு அருள் புரிவானாக' என துஆ(பிரார்த்தனை) செய்தாள்.
தன்னுடைய சந்தோஷத்தை விட மற்றவரை சந்தோஷப்படுத்துபவனே உயர்ந்தவன்.
