ADDED : செப் 03, 2026 11:14 AM
சிறுவன் அஹ்மத்திற்கு அவனுடைய அப்பா அழகான மரப்பெட்டியைப் பரிசளித்தார். அதன் மீது 'இறைவனின் திருப்தி' என எழுதப்பட்டிருந்தது.
''அஹ்மத்... இன்று முதல் தினமும் இந்தப் பெட்டிக்குள் சீட்டு ஒன்றை போட வேண்டும். அதாவது நீ தினமும் என்ன நல்லதைச் செய்கிறாயோ, அதை எழுதி இதற்குள் போடு. ஆனால் ஒரு நிபந்தனை. நீ செய்யும் நல்லதை யாரிடமும் சொல்லக் கூடாது'' என்றார்.
அஹ்மத்தும், ''ஐ... இது நல்லா இருக்கே'' என சம்மதித்தான். அன்று முதல் இதற்காகவே வலியச் சென்று பிறருக்கு உதவி செய்ய ஆரம்பித்தான். ஒருநாள் தன் நண்பன் அமீர் பென்சில் கொண்டு வரவில்லை. அவனுக்கு தன்னுடைய பென்சிலைக் கொடுத்தான். பசியோடு இருந்த பூனைக்கு பால் வாங்கி ஊற்றினான். இப்படி தன்னால் முடிந்த உதவிகளை செய்து, அதை சீட்டில் எழுதி பெட்டிக்குள் போட்டு வந்தான்.
ஒருநாள் அவனது அப்பா நாளிதழ் படித்துக் கொண்டிருந்தார். அவரிடம் அஹ்மத், ''அப்பா... நீங்கள் கூறியபடியே பிறருக்கு நன்மை செய்கிறேன். ஆனால் யாரிடமும் சொல்லாமல் பெட்டிக்குள் எழுதி போடச் சொன்னீர்கள்'' எனக் கேட்டான்.
''நாம் ஒருவருக்கு கொடுப்பது எதுவாக இருந்தாலும் இறைவனுக்காக மட்டுமே இருக்க வேண்டும். பிறர் பாராட்ட வேண்டும் என எதிர்பார்த்தால், அது நீ செய்த உதவியின் பலனை அழித்துவிடும். எனவே நாம் எதைச் செய்தாலும் 'இறைவா... உன் திருப்திக்காக மட்டுமே செய்கிறேன்' என நினைக்க வேண்டும். அப்போதுதான் அவன் அதை ஏற்பான். அதற்காகவே உனக்கு இந்த மரப்பெட்டி பரிசு'' என்றார்.
